Back to Top

7 தேசிய கட்சிகளின் வருமானம் 1,559 கோடி

7 தேசிய கட்சிகளின் வருமானம் 1,559 கோடி

April 11, 2018  09:53 am

Bookmark and Share
கொல்கத்தாவை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் 7 தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்த தங்களது 2016-17-ம் ஆண்டுக்கான வரவு மற்றும் செலவு குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக நேற்று வெளியிட்டது.

இதில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளின் வருமான, செலவுத் தொகைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பா.ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகளும் 2016-17-ம் ஆண்டில் மொத்தம் 1,559 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளன.

* இந்த 7 கட்சிகளும் 1,228 கோடியே 26 லட்ச ரூபாயை இந்த ஆண்டில் செலவிட்டு இருக்கின்றன.

* 2016-17-ம் ஆண்டில் பா.ஜனதாவின் வருமானம் ரூ.1,034 கோடி. காங்கிரஸ் கட்சியின் வருமானம் 225 கோடி.

* பா.ஜனதா அதிக பட்சமாக இந்த ஆண்டில் ரூ.710 கோடியை செலவிட்டு இருக்கிறது. இதில் தேர்தலுக்காக மட்டுமே ரூ.606 கோடியை இக்கட்சி செலவிட்டு உள்ளது. காங்கிரஸ் மொத்தம் ரூ.321 கோடியை செலவிட்டு இருக்கிறது. இதில் தேர்தல் செலவு ரூ.149 கோடி ஆகும்.

* தங்களுக்கு உள்ள 3 விதமான வருவாய் வழிகளில் ஒன்றான நன்கொடை மூலம் மட்டும் பா.ஜனதா ரூ.997 கோடியும், காங்கிரஸ் ரூ.50 கோடியும் ஈட்டியுள்ளன. இது தவிர கூப்பன் வினியோகம் மூலம் ரூ.115 கோடியை வருவாயாக பெற்று இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்து இருக்கிறது.

* 7 தேசிய கட்சிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளும் தங்களுடைய தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கடந்த 5 ஆண்டுகளாக தாமதமாகவே தாக்கல் செய்துள்ளன.