Back to Top

மக்களுக்கு பணியாற்ற அனைத்து உறுப்பினர்களையும் முன்வருமாறு அழைப்பு

மக்களுக்கு பணியாற்ற அனைத்து உறுப்பினர்களையும் முன்வருமாறு அழைப்பு

April 11, 2018  01:28 pm

Bookmark and Share
“சுத்தமான பசுமை நகரை நோக்கி” எனும் தொனிப்பொருளில் மத்திய மாகாண அரசின் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புடன், மாநகர மக்களுக்கு பணியாற்ற அனைத்து உறுப்பினர்களையும் முன்வருமாறு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அழைப்பு விடுத்தார்.

யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு இன்று (11) யாழ்.நல்லூர் வீதியில் அமைந்துள்ள யாழ்.மாநகர சபை கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் சபை ஆரம்பமாகியது. சபையில் தனது கன்னியுரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தமிழ் தேசியத்தின் மீது கொள்கையும், தீராத பற்றுறுதியும் கொண்டவன். நாம் மக்களின் நெடிய போராட்ட வரலாற்றினைக் கடந்துகொண்டு வருகின்றோம். அந்த போராட்டத்தில் அகிம்சை சார் மென்வலு பூட்டியும், யுத்தம் சார் மென்வலுவினை பூட்டிக்கொண்டு, இந்த மக்களும், நாட்டு மக்களும் ஜனநாயக வழியே மிகச் சார்ந்தது. இந்த கொள்கையே எனதும், நான் சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையும் ஆகும்.

தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்துடன், பல்வேறு கட்சிகளாகவும், குழுக்களாகவும் பிரிந்து, நாம் தேர்தல்களை எதிர்நோக்கினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பாக சுத்தமான, பசுமையான மாநகரம் எனும் தொனிப் பொருளுடன் பிரதானமான 7 விடயங்களையும், 31 துணை விடயங்களையும் முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தினை எமக்கு வாக்களியுங்கள் என மக்களிடம் வாக்களிக்குமாறு கோரினோம்.

யாழ்.மாநகரத்தின் முக்கியத்துவம் என்ன என்பது இலங்கை மக்களினாலும், உலக மக்களினாலும் அதிகம் நேசிக்கப்படுவது. இந்த நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கைத்தரமும் இந்த நகரால் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.

யாழ். மாநகர சபையின் முதல்வராக கடமைப்பொறுப்பினை ஏற்ற நாளில் இருந்து மாணவனாக நிர்வாகத்துறைகளின் செயற்பாடுகளையும், மக்களின் தேவைகளையும், கழிவகற்றல் முகாமைத்துவம், வர்த்தக தொழில்துறை உட்பட ஊழியர்கள், அதிகாரிகள் நிதிசார்ந்த விடயங்களையும் கண்டறிந்துகொண்டேன்.

எனது மாநகர சபையில் உள்ள தேவைகளையும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

யாழ்.மாநகர சபைக் கட்டிடம் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் அமையும். மாநகரத்தின் திண்மக் கழிவகற்றல் முறைமை வினைத்திறனுடன் செயற்பட்டு, நகரம் சுத்தமாக்கப்படும். சாத்தியமான வழிமுறைகளின் கீழ் மாநகரம் முழுவதிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம். நிலத்தடி நீர் மாசடைதலைத் தடுக்கும் வகையில், மலசல கூட கழிவுகள் கலக்காதவகையில், பாதாள சாக்கடை திட்டத்தினை நடைமுறைப்படுத்தல். மாநகரத்திற்கு நவீன முறையிலான புதிய வடிகால் அமைப்பு அறிமுகம் செய்தல். மநாகர எல்லைக்குள் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு உடனடித் தீர்வு காணுதல். முன்னைய நிர்வாகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல்களுக்கு உடனடி விசாரணை சேவை வழங்கல். மாநகரத்தின் மக்கள் உடனடியாக தொடர்புகொள்ள புதிய பொறிமுறைகளை உருவாக்கவுள்ளோம். யாழ்.மாநகரத்தின் நிர்வாக விடயத்தினை சரியான முறையில் முன்னெடுக்க வேண்டும்.

இந்த மாநகரத்தின் முன்னேற்றத்திற்கு மாநகர சபையின் ஊழியர்கள் அனைவரும் பங்காளர்களே, யாழ்.மாநகர சபையின் வினைதிறனான நிர்வாகத்தினை நடாத்திக் காட்டுவோம்.

எனவே, கடந்த காலத்தில் யாழ்.மாநகர சபையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றன. அந்த முறைப்பாடுகள் உரிய முறையில் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். வடமாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சு முறைகேடுகள் விடயத்தில் முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் இந்த அவை அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் இத்தகைய அடையாளங்களுடனும், அடிப்படைகளுடனும், “சுத்தமான பசுமை மாநகரை நோக்கி” என்ற கருதுகோளுடன் கட்சி பேதங்களுக்கு அப்பால், மத்திய மாகாண அரசுகளின் உதவிகளுடனும், ஒத்துழைப்புக்களுடனும், எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

(யாழ். நிருபர் சுமித்தி)