Back to Top

மே 18 வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று

மே 18 வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று

May 8, 2018  09:22 am

Bookmark and Share
முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே 18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவு கொள்ளும் நாளோ அன்று என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டி நிற்கும் நாள் தான் மே 18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் இனவழிப்பு நினைவு நாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமாகிய நாம் கடந்த பல வாரங்களாக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தோம்.

கடந்த ஆண்டுகளில் இந்நிகழ்வுகளை தனித்தியாக நடாத்தியவர்களோடு உரையாடி ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கான எமது முயற்சிகள் ஆங்காங்கே இடறுப்பட்டாலும் முன்னேற்றகரமாகவே அமைந்திருந்தது.

பல்வேறு அரசியல் செயற்பாட்டுக் குழுக்களும் அமைப்புக்களும் எமது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தன. கடந்த ஆண்டு நிகழ்வுகளை நடாத்திய தரப்புக்கள் கூட தமது ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. ஆனால் இந்நிலையில் வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக தற்போது வட மாகாண சபை தாமே இந்நிகழ்வை நடாத்துவோமென அறிவித்துள்ளது எமது மன வேதனையைத் தந்திருக்கிறது.

வட மாகாண சபை இந்நிகழ்வை நடாத்துவதானது மீளவும் கடந்த ஆண்டுகளைப் போல் நிகழ்வுகள் பிரிந்து நடாத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும் என்பதை நாம் மன வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நிகழ்வானது தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மடிந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வோ அல்லது மே 18 என்பது தனியே அன்று மடிந்த மக்களை மட்டும் நினைவுகொள்ளும் நாளோ அன்று.

மாறாக தமிழினம் எதிர்கொண்ட இனவழிப்பை ஒட்டுமொத்தமாகச் சுட்டி நிற்கும் நாள் தான் மே 18. இந்நாள் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரியதன்று. முள்ளிவாய்க்கால் நிகழ்வும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதன்று.

எனவே இந்நிகழ்வை வட மாகாண சபை தான் நடாத்துவதென்பது அரசியற்பொருத்தமற்ற செயல். அத்தோடு சர்ச்சைக்குரிய அந்த அரசியல் அதிகாரக் கட்டமைப்பு தமிழர்களைத் தலைமை தாங்கும் கட்டமைப்பாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை. இந்நிலையில் தாமே தமிழர்களை ஒருங்கிணைக்கும் அதிகாரக் கட்டமைப்பு என்ற தொனியில், தமக்கே இந்த நிகழ்வை நடாத்த உரித்துண்டு என்று வட மாகாண சபை உறுப்பினர்கள் நினைப்பது பொருத்தமற்றது.

ஏற்கனவே எமது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல், இந்நிகழ்வானது ஒற்றுமையென்ற பேரில் தகாதவர்களையும் கூட்டி கூத்தடிக்கும் வகையில் அமையக்கூடாதென்பது மக்களின் அவாவாகும். வட மாகாண சபையானது இந்த அவாவை நிறைவு செய்யக்கூடிய தகுதியுள்ளதா என்ற கேள்வியை அவர்களே தமது மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளட்டும்.

மேலும், வட மாகாண சபையானது தேர்தல் வழி அமைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும். அது காலப்போக்கில் யார் யார் கையிலாவது போய்ச்சேரும். இன்றிருக்கும் முதல்வர், இனவழிப்பு தொடர்பிலும் தமிழரின் அரசியல் அபிலாசைகள் தொடர்பிலும் சரியான நோக்குடன் செயற்படுகிறார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஆனால் தொடர்ந்து வரப்போகும் முதல்வர்களும் ஆளுங்கட்சியும், உறுப்பினர்களும் எவ்வாறு அமைவார்கள் என்பது உறுதிபடச் சொல்ல முடியாது. இனவழிப்புக்குத் துணைபோனவர்களே கூட மாகாண சபை நிர்வாகத்தைக் கோலோச்சக்கூடும்.

இந்நிலையில் வட மாகாண சபை தான் மே 18 நிகழ்வை முள்ளிவாய்க்காலில் செய்யும் என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கினால் காலப்போக்கில் இந்நிகழ்வே கேலிக்குரியதும் கேள்விக்குரியதும் ஆகிவிடுமென்ற கரிசனை எமக்குண்டு. இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு, தாங்கள் முதல்வராக இருக்கும் போதே இந்நிகழ்வை ஒரு பொதுமக்கள் நிகழ்வாக மாற்ற வழிசமையுங்கள் என்று நாம் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

எனினும் வட மாகாண சபையின் தன்னிச்சையான போக்கும் தமது தனிப்பட்ட அரசியல் நலன்கள் அடிப்படையில் சிலர் சிந்தித்ததின் விளைவும் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ இருந்த ஒன்று பட்ட எழுச்சி நிகழ்வைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

பல்கலைக்கழக மாணவர் சமூகம் முன்னெடுத்த இந்த முயற்சிக்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பல்வேறு வழிகளில் தமது ஆதரவை வழங்கியிருந்த நிலையில் வட மாகாண சபையின் தான் தோன்றித்தனமான இந்த முடிவு எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இயன்றவரை முயன்றும் அவர்களின் விடாப்பிடியான முடிவால் எமது முயற்சிகள் முழுமைபெறாமல் முடக்கப்பட்டுள்ளதை எமது மக்களுக்கு மிகுந்த மனவருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கின்றோம். ஓர் இனத்தின் ஆன்மாவே அவதிக்குள்ளாகித் தவிப்பதை நினைவுகொள்ளும் நாளை – உலகின் மனச்சாட்சியை எம் ஒன்றுபட்ட குரல்களால் உலுப்பும் நாளை – எமதினம் எதிர்கொண்ட ஒட்டுமொத்தத் துன்பத்தையும் நினைந்துருகிக் கரையும் நாளை – தமது அரசியல் சுயலாபங்களுக்காக பந்தாட நினைக்கும் அரசியலாளர்கள் மக்களுக்குப் பதில்சொல்லியே ஆகவேண்டும்.

எமது ஒற்றுமை முயற்சியின் பலனாக ஏற்கனவே எழுச்சியுற்றிருக்கும் மாணவர் சமூகம், மக்கள் கூட்டம், செயற்பாட்டியக்கங்களின் கோபக் குமுறுலுக்கான பதிலை அவர்களே தயார்செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கென அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து வசதிகள் செய்து பயணம் மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையிலும், பல்பேறு மக்கள் அமைப்புக்கள் எமது முயற்சிக்கு ஆதரவுதந்து பெரும் மக்கள் அலை திரண்டுவந்து நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த நிகழ்வை, கடந்த ஆண்டுகளைப் போல் சிதைந்துபோக வைத்த பெருமை வடமாகாணசபையினரையே சாரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)