
சைக்கிளில் போட்டியிட்ட 23 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
May 16, 2018 03:36 pm
மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரின்
நியமனங்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுக்க
மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள குறித்த 23 உறுப்பினர்கள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்
உள்ளிட்ட 27 பேருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது.
மகரகம நகர சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் 23 பேரும்
அந்த நகர சபை பிரிவுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திவுலபிட்டிய, படல்கம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த அவர்களுக்கு உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி
மகரகம நகர சபையின் உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை என்று அந்த மனுவில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்களின் உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவிடுமாறு மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
மகரகம நகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எல். சந்திரசேன பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர
முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.