
மனித எலும்பு அகழ்வு தொடர்பான ஆய்வு 27 ஆம் திகதி
May 17, 2018 06:34 pm
´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெறவுள்ளதாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
குறித்த வளாகத்திற்கு இன்று (17) காலை 10.30 மணியளவில் மன்னார் நீதவான் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன் போது களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர், சட்டத்தரணிகள், மன்னார் நகர சபையின் தலைவர், விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச்சபை அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மதியம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர் உட்பட அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போதே எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8 மணிக்கு மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ´லங்கா சதொச´ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளுவது என முடிவு எடுக்கப்பட்டது.
அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் முதல் நாள் வருகை தருவதினால் குறிக்கப்பட்ட நேரத்தில் மனித எலும்பு அகழ்வு மற்றும் ஆய்வுகள் இடம் பெறும் என சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் லெம்பட்)