Back to Top

அனைத்து தரப்பும் இணைந்து  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)

அனைத்து தரப்பும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (படங்கள்)

May 18, 2018  01:40 pm

Bookmark and Share
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் இன்று (18) உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

ஈகை சுடரினை வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் முள்ளிவாய்க்காலில் இழந்த யுவதி கேசவன் விஜிதா ஆகியோர் ஏற்றியதை தொடர்ந்து, ஏனையவர்களும் சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் முயற்சி காரணமாக அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் சமுக அமைப்புக்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானவர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இன்று ஒரு சில தீர்மானங்கள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அவையாவன,

(01) இவ் வருடத்தில் இருந்து ஒவ்வொரு மே 18 ஆம் நாளானது தமிழர் இன அழிப்பு நாளாகத் தொடர்ந்து எமது மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வர வேண்டும்.

(02) சர்வதேச சமூகமானது விரைவாக இந்த இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்ட கால தாமதம் இன்றி தலையிடவேண்டும்.

(03) தொடர்ச்சியாக கட்டமைப்பு சார் இன அழிப்பை சந்தித்து வரும் இனம் என்ற வகையில் இவற்றைத் தடுக்கும் வகையில் எமக்கான தீர்வை இறைமை, தாயகம், தனித்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பரிகார நீதியூடாகப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வரவேண்டும்.

(04) முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அவலங்கள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், போருக்கு பின்னரான இன்றைய அவலத்தை ´பேரிடர் நிலைமையாக´ Mass Disaster Situation எனக் கருதி அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தம்மாலான உதவிகள் சகலதையும் நேரடியாக வழங்க முன்வர வேண்டும்.

(05) ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்படவேண்டும். எமது மக்களுக்கு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு தொடர்ந்து எமது பிரதேசங்களில் முகாமிட்டு இருக்கும் விதத்திலேயே படையினர் இன்று செயற்பட்டு வருகின்றனர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

(06) முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து அடுத்த வருடம் பத்து வருடங்கள் பூர்த்தி அடைகின்றன. தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக, ஒருமித்த துக்க நாளாக மே 18 ஐ கணித்து, வரும் வருடங்களில் தமிழர் தம் சகல நலவுரித்துக்களையும் ஒன்றிணைத்து, குழு அமைத்து இந் நினைவேந்தலை கட்சி பேதமின்றி, பிராந்தியப் பேதமின்றி கொண்டு நடத்த நாம் முன்வர வேண்டும். என்பன இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட சில தீர்மானங்களாகும்.

மேலும், இன்றைய தினத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன் இதே மண்ணில் அநியாயமாகக் கொன்று ஒழிக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரதும் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்போமாக, இங்கு வந்திருக்கும் அவர்களின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்துவோமாக, எமது பிரார்த்தனைகளும் அனுதாப உணர்வுகளும் ஓரளவுக்கு உங்கள் சோகப்பட்ட உள்ளங்களை அமைதிப்படுத்துவன என்று எதிர்பார்க்கின்றோம் எனவும் வட மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன் மற்றும் யாழ். நிருபர் ரமணன்)