Back to Top

தென்னிலங்கை மீனவர்களின் கடலட்டை தொழிலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தென்னிலங்கை மீனவர்களின் கடலட்டை தொழிலை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

June 8, 2018  12:28 pm

Bookmark and Share
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கடலட்டை தொழிலை தடை செய்ய வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் ஒன்று இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யாழ். பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்தின் அலுவலகத்தை இன்று (08) காலை 8 மணியளவில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அதனால் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகஸ்தர்களை அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தென்னிலங்கை மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அப்பகுதியில் தங்கியிருந்து கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிலங்கை மீனவர்களின் இந்த செயற்பாட்டை கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் நியாயப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் தென்னிலங்கை மீனவர்களால் முன்னெடுக்கப்படும் கடலட்டை பிடிக்கும் தொழிலை தடுத்து நிறுத்தி, அவர்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதுடன் வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் உள்ளூர் மீனவர்களால் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed