Back to Top

ஒத்திவைக்கப்பட்டிருந்த போட்டிகள் இன்று

ஒத்திவைக்கப்பட்டிருந்த போட்டிகள் இன்று

August 9, 2018  07:58 am

Bookmark and Share
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்பட்ட 2 போட்டிகள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ​போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.

3 ஆவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் போட்டிகள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

முதலாவது தகுதி சுற்று போட்டி நெல்லையில் நேற்று முன்தினம் இரவும், வெளியேற்றுதல் சுற்று போட்டி நத்தத்தில் நேற்று இரவும் நடைபெறுவதாக இருந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக இந்த 2 போட்டியும் தள்ளி வைக்கப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட இந்த 2 போட்டியும் நத்தத்தில் (திண்டுக்கல்) இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் - 2ஆவது இடம் பெற்ற டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் வருகிற 12ஆம் திகதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு உண்டு.

இரவு 7.15 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று போட்டியில் 3 ஆவது இடம் பிடித்த அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, 4 ஆவது இடம் பெற்ற எஸ்.அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.

இந்த மோதலில் வெற்றி பெறும் அணி, நத்தத்தில் நாளை இரவு நடைபெறும் 2 ஆவது தகுதி சுற்று போட்டியில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி அடையும்.

Most Viewed