Back to Top

இலங்கையில் 'மிகவும் பாராட்டுக்குரிய 10 நிறுவனங்கள்' வரிசையில் இடம்பிடித்துள்ள கொமர்ஷல் வங்கி

இலங்கையில் 'மிகவும் பாராட்டுக்குரிய 10 நிறுவனங்கள்' வரிசையில் இடம்பிடித்துள்ள கொமர்ஷல் வங்கி

September 14, 2018  01:29 pm

Bookmark and Share
இலங்கையில் ´மிகவும் பாராட்டுக்குரிய 10 நிறுவனங்கள்´ வரிசையில் கொமர்ஷல் வங்கியும் இடம்பிடித்துள்ளது. சர்வதேச வர்த்தக சபையின் (ICC) விருது வழங்கும் நிகழ்வில் இந்தச் சிறப்பு கொமர்ஷல் வங்கிக்கு கிடைத்துள்ளது. இலங்கையின் முகாமைத்துவக் கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்துடன் (CIMA) இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பத்து நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கம்பனியின் நிதி ரீதியான சிறப்புச் செயற்பாடுகள், அதன் பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் அது உருவாக்குகின்ற பெறுமதிகள் என்பனவற்றுக்கான ஒரு அங்கீகாரமாகவே இந்த விருது வழங்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி செயற்பாடு, சமூக முதலீடு, இணக்கப்பாடு ஆகிய பிரதான விடயங்கள் இதற்காக கருத்தில் கொள்ளப்படுகின்றன.

நாட்டின் முன்னணி தொழில் தருனர்களில் ஒருவரான கொமர்ஷல் வங்கி தொடர் கற்றலையும் அறிவுத் தேடலையும், செயற்பாட்டு அடிப்படையிலான மதிப்பீடு, வாழ்க்கை ஆயுள் சமநிலை, குழு ரீதியான செயற்பாடு என்பனவற்றை தூண்டி வருவதாக தெரிவித்துள்ளது. வங்கியின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மூலோபாயம் என்பன ஆகக் கூடிய தொழில் திருப்தி மற்றும் தொழில் முன்னேற்றம் என்பனவற்றை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்கால மற்றும் எதிர்கால இலக்குகளை தனது ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அவர்களின் ஆற்றல் மேம்பாடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

´சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு பாராட்டுக்களும் கௌரவங்களும் எப்போதும் பெறப்பட்டு வருகின்றன´ என்று கூறினார் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ரெங்கநாதன். ´எந்தவொரு தொழில் முயற்சிக்கும் இவை மிகவும் பெறுமதியானவை ஆகும். அதிலும் நிதிச் சேவையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பெறுமதியானதாகும். காரணம் இதில் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெல்வதே மிகவும் பிரதானமானதாகும். அந்த வகையில் இலங்கையின் பத்து முன்னணி கம்பனிகள் வரிசையில் நாமும் இடம்பிடித்துள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்´ என்று அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் மிகப் பெரிய தனியார் வர்த்தக வங்கியும், ஒட்டுமொத்த சொத்துக்களின் அடிப்படையில் இலங்கையின் மூன்றாவது பெரிய வங்கியுமான கொமர்ஷல் வங்கி பிரிவு ரீதியான சொத்துக்களில் கணிசமான பங்கினைக் கொண்டிருப்பதோடு முப்பது லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர் பிரிவுக்கும் அது சேவை ஆற்றுகின்றது. இலங்கையிலும் பங்களாதேஷிலும் அதன் ஊழியர்படை 4982 ஆகும். பங்களாதேஷில் அது 19 கிளைகளையும் கொண்டுள்ளது. மியன்மாரின் யங்கூனில் அதற்கு ஒரு பிரதிநிதிகள் அலுவலகமும், நேய் பிடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றையும் அது கொண்டுள்ளது. மாலைதீவில் முழு அளவிலான முதல் வரிசை வங்கி ஒன்றும் உள்ளது. இத்தாலியில் பணப்பரிமாற்றசேவை ஒன்றையும் வங்கி கொண்டுள்ளது.

தொடர்ந்து எட்டு வருடங்களாக உலகின் தலை சிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 262 கிளைகளுடனும், 780 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. வங்கி 2016 மற்றும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட உள்ளுர் மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2018ன் முதல் ஆறு மாதகாலத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.

Most Viewed