Back to Top

மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது குறைவு

மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது குறைவு

October 11, 2018  07:36 am

Bookmark and Share
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட “TITLI” என்ற சூறாவளிக் காற்றானது இன்று வட அகலாங்கு 16.00 பாகை மற்றும் கிழக்கு நெடுங்கோடு 85.80 பாகைகளுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியானது திருகோணமலைக்கு 1050 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளதுடன் மேலும் பலமடைந்து வடமேற்கு திசையில் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)