Back to Top

அவுஸ்திரேலிய கொடைவள்ளலின் உதவியுடன் 100 கிராமங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டம்

அவுஸ்திரேலிய கொடைவள்ளலின் உதவியுடன் 100 கிராமங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு செயற்திட்டம்

November 7, 2018  02:14 pm

Bookmark and Share
நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் ஆற்றல் மூலமாக ஈட்டப்படுகின்ற மகத்தான நற்பலன்கள் மற்றும் பெறுபேறுகளை தனிப்பட்ட கொடையாளர்களால் அடையப் பெற முடியாது என்பதே நாம் அடிக்கடி கேள்விப்படும் கருத்தாக உள்ளது. எனினும், ஊடகங்களில் எவ்விதமான பிரபலத்தையும் தேடிக்கொள்ளாது, இலைமறைகாயாக தமது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க விரும்புகின்ற கொடையாளர்களை நாம் காணப்பெறுவது மிகவும் அரிதாகும். ஸ்கொட் வோக்கர் அவர்கள் அத்தகைய அரிய கொடையாளர்களுள் ஒருவராவார்.

அவுஸ்திரேலியரான அவர் ஒரு வெற்றிகரமான வர்த்தகரும், தொழில் முயற்சியாளரும் ஆவார். 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன்முறையாக வருகை தந்த அவர், அன்று முதல் பல்வேறு தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

அனேகமான நல்ல விடயங்களைப் போலவே, இலங்கைக்கு வோக்கரின் அறிமுகமும் தற்செயலாக கிடைக்கப்பெற்ற ஒன்றாகும். அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து கப்பல் மூலமாக இங்கிலாந்திற்கு செல்லும் வழியில் இலங்கைத் தீவில் ஒரு நாள் தங்கியிருக்க நேர்ந்தது. அச்சமயத்தில் கொழும்பு மற்றும் கல்கிசைக்கு வருகை தந்திருந்த வோக்கர் அவர்களுக்கு ஒரு உறுதியான ஈர்ப்புணர்வு ஏற்பட்டதுடன், ´கடந்த பிறப்பின் போது தான் ஒரு இலங்கையராகவே இருந்திருக்க வேண்டும்!´ என உறுதியாக நம்பினார்.

நாட்டில் தனது தொண்டு நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கிய வோக்கர் அவர்கள் இது தொடர்பில் கூறுகையில், ´யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பதுளை ஆகிய இடங்களில் மூன்று அனாதை இல்லங்களுக்கு நிதியளிப்பதுடன் எனது பணியை முதலில் ஆரம்பித்திருந்ததுடன், அங்கே தங்கியிருந்த சிறுவர்கள் வாரத்தில் மூன்று தடவைகள் ஆங்கில மொழியைக் கற்று வந்தனர்.

அதன் பின்னர், மஹரகமவில் புற்றுநோயாளர்களுக்கான 190 படுக்கைகளைக் கொண்ட இடைத்தங்கல் இல்லமாக அமைந்த CCC Foundation இன் CCC வீடமைப்புச் செயற்திட்டத்தைப் பேணிப் பராமரிப்பதற்கு நான் நிதியுதவியை வழங்கியிருந்தேன். இப்படியாக நான் இலங்கைக்கு வந்து செல்லும் சமயங்களில், ஒரு முறை அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில் இலங்கையில் நிலவும் சிறுநீரக வியாதி தொடர்பில் வாசித்து அறியக் கிடைத்ததுடன், தற்செயலான ஒரு சம்பவமாக, அனுராதபுரத்தில் உள்ள இரு கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பதற்காக நிதி சேகரிப்பதற்கு Moorooka லயன்ஸ் கழகமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தது. அச்சமயத்தில் நானும் எனது பங்களிப்பை வழங்கியிருந்தேன்.

இந்த அனுபவத்தின் விளைவாக, குயின்ஸ்லாந்திலுள்ள இலங்கை நிறுவனங்கள் சம்மேளனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான பில் டோட்ரம் மற்றும் ABC Trade and Investments நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான அமல்ராஜா ஜெயசீலன் ஆகியோருடன் இணைந்து 100 கிராமங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கும் பணிகளில் இணைந்து கொண்டேன்,´ என்று குறிப்பிட்டார்.

100 கிராமங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்கும் செயற்திட்டத்திற்கு அந்த உபகரணங்களைப் பொருத்தி, பேணிப் பராமரிப்பதற்கு நன்மதிப்புடைய நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. இச்சமயத்தில் வோக்கர் அவர்கள் ABC Trade and Investments நிறுவனத்தை தொடர்பு கொண்டதுடன், வெற்றிகரமான பங்குடமையொன்றும் இதன் மூலமாக ஸ்தாபிக்கப்பட்டது. CKD எனப்படுகின்ற சிறுநீரக வியாதியால் பாதிக்கப்பட்ட நோயாளர்களைப் பெருமளவில் கொண்டுள்ளதுடன், உதவிகளையும் எதிர்பார்த்திருந்த கிராமங்களை இனங்கண்டு, குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளைப் பேணுவது தொடர்பில் அனைத்து அம்சங்களையும் கிராமவாசிகள் மத்தியில் பயிற்றுவித்து, அதன் மூலமாக பொறுப்புணர்வு மற்றும் தங்களது சொந்தப் பொருளைப் பேணிப் பாதுகாப்பதை ஒத்த வகையில் ஆலைகளைப் பேணுவதற்கு அவர்கள் மத்தியில் உணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆலோசனையுடன் நிகழ்ச்சித்திட்டமொன்றை நிறுவனம் தோற்றுவித்திருந்தது.

குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவும் செயற்திட்டமானது வோக்கர் அவர்கள் வழங்கிய 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையுடன் முன்னெடுக்கப்பட்ட பிரதான தொண்டுப் பணிகளில் ஒன்றாக அமைந்துள்ள போதிலும், உள்ளூர்வாசிகளுக்கு ஆங்கில கற்கைநெறிகள், தகவல் தொழில்நுட்ப பயிற்சி, பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள், தொழிற்பயிற்சி மற்றும் பல உதவிகளை வழங்கி Foundation of Goodness யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்த Village Heartbeat செயற்திட்டத்தின் சில பணிகளுக்கும் அவர் உதவியுள்ளார்.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட காலகட்டங்களிலும் வோக்கர் அவர்கள் அவ்வப்போது தமது உதவிகளை வழங்கியுள்ளார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் மோதரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கி, வீடுகளுக்கு பதில் தளபாடங்களை வழங்கி, சிறுவர்களுக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் பைகளை வழங்கி மீள்வாழ்வுக்கு திரும்பவும் அவர் பங்களிப்பாற்றியுள்ளார்.

திரு. வோக்கர் அவர்கள் இலங்கையில் தனது தொண்டுப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளார். இந்நாட்டின் மக்கள், கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகின் மீது நேசம் கொண்டுள்ள அவர், இலங்கையில் தனது பங்களிப்புக்கள் மூலமாக உதவிகளை பெற்றுள்ளவர்கள் சிறந்த தேசமாக அதனை மாற்றியமைப்பர் என நம்பிக்கை கொண்டுள்ளார்.