Back to Top

ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

December 4, 2018  09:39 am

Bookmark and Share
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு, கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு ஒன்று நேற்று (03) மாலை நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் க. இன்பராஜா, ஊடகப் பேச்சாளர் ஜோன்சன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த 30 ஆம் திகதி வவுணதீவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு பொலிஸாருக்கும் அஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது போராளிகள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் காரணமாக முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பமும் பெரும் அச்ச நிலையில் வாழ்வதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் அச்சமற்ற சூழ்நிலையில் வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும் சிலர் மாவீரர் தினத்தின் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இவ்வாறான செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மட்டக்களப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலமை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முன்னாள் போராளிகளை அச்சம் கொள்ளச் செய்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் வெளிப்படுத்தப்படும் போதே முன்னாள் போராளிகளின் அச்சம் நீக்கப்படும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் போராகள் இன்று மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மன நிலையில் இல்லை, யாரையும் சுட்டுக் கொல்ல வேண்டிய தேவையும் இல்லை எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)