Back to Top

1000 ரூபா சம்பளத்தினை வலியுறுத்தி 2 வது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

1000 ரூபா சம்பளத்தினை வலியுறுத்தி 2 வது நாளாகவும் ஆர்ப்பாட்டம்

December 5, 2018  04:27 pm

Bookmark and Share
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி முடிவடைந்துள்ள நிலையில் மலையகம் எங்கும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் மலையகம் எங்கும் பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக டயர்களை எரித்து சில தொழிலாளர்கள் சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதேவேளை, மலையகத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சாரார் கலந்து கொள்ளாது தேயிலை மலைக்கு சென்று களை பறிக்கும் தொழில் ஈடுபட்டு வந்த போதிலும் கூட இன்று முற்பகல் 11 மணிக்கு பிறகு தொழிலுக்கு சென்ற ஒரு சாராரும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் பெருந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கபடுகின்ற பணிபுறக்கணிப்பு காரணமாக தேயிலை தொழிற்சாலையின் நடவடிக்கைகள் பாதிக்கபட்டுள்ளதோடு, தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள காவலாளிகளையும் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரியுள்ளதோடு தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் எங்கள் கரம் கிட்டும் வரையில் எங்கள் பணி புறக்கணிப்பு தொடரும் எனவும் தெரிவித்தனர்.

(மலையக நிருபர் சதீஸ்குமார்)