Back to Top

மத்துகமவில் கொழுந்து விநியோகிப்பவர்களுக்கு நிதிக் கற்கை திட்டம் - கொமர்ஷல் வங்கி

மத்துகமவில் கொழுந்து விநியோகிப்பவர்களுக்கு நிதிக் கற்கை திட்டம் - கொமர்ஷல் வங்கி

January 11, 2019  03:32 pm

Bookmark and Share
மத்துகம பிரதேசத்தில் தேயிலைக் கொழுந்து விநியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உள்ளடக்கிய நுண் தொழில் முயற்சியாளர்களுக்கு அண்மையில் கொமர்ஷல் வங்கி நிதிக் கற்கை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இலங்கை மத்திய வங்கியின் உதவியோடு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்பிரதேசத்தில் உள்ள அருண தேயிலைத் தொழிற்சாலைக்கு தமது உற்பத்திகளை விநியோகிக்கும் 154 கொழுந்து விநியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த வகை சார் நிகழ்ச்சிகளில் 2018ல் நடத்தப்பட்ட பத்தாவது நிகழ்ச்சி இதுவாகும். நுண் தொழில்முயற்சியாளர்கள் மத்தியில் நிதி தொடர்பான செயற்பாட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதே வங்கி மேற்கொள்ளும் இவ்வகைத் திட்டங்களின் பிரதான இலக்காகும்.

இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் றோஹித்த அபேகோன் இந்நிகழ்வில் பிரதம வளவாளராகக் கலந்து கொண்டார். இவர் நிதி அறிவு மற்றும் வர்த்தக அபிவிருத்தி தொடர்பாக மிக விரிவான அனுபவம் உள்ள ஒரு பேச்சாளராவார்.

கொமர்ஷல் வங்கியின் தனியார் வங்கிப் பிரிவு பிரதி பொதுமுகாமையாளர் திலக்ஷன் ஹெட்டிஆரச்சி, அபிவிருத்திக் கடன் பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் மொஹான் பெர்ணான்டோ, வங்கியின் மத்துகமை கிளை முகாமையாளர் ஏ.பி.என். அசன்த மற்றும் ஏனைய அதிகாரிகளும் அருண நிறுவனக் குழுமத்தின் தலைவர் அஜித் இன்திக, குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரமேஷ் ஹஸன்த பிரதம நிறைவேற்று அதிகாரி கனிஷ்க சமரசிங்க அகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இநதப் பிரிவைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி ஏற்கனவே சொனி பெலிக்கா NFC தொழில்நுட்பத்துடன் கூடிய ஹைபிரிட் டேபிட் கார்ட் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி உதவி உள்ளது.

இந்த தனிநபர் அடையாள அட்டை கொழுந்து விநியோகத்துக்கான கொடுப்பனவுகளை தானாகவே சரி பார்த்துக் கொள்ள உதவுகின்றது. இந்த கொடுப்பனவுகள் மத்திய தரவு மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து உடனடியாக கொமர்ஷல் வங்கியின் நம்பந்தப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு மாற்றப்படுகின்றன.

பல்வேறு வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்த நுண் தொழில் முயற்சியாளர்களுக்கு நாட்டின் பல பாகங்களிலும் வங்கி இவ்வாறான நிதிக் கற்கைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. கடந்த சுமார் ஆறு ஆண்டுகளில் இத்தகைய வேலைத் திட்டங்கள் மூலம் வங்கி சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி உள்ளது.

தமது விவசாய செயற்பாடுகளை அல்லது சிறிய அளவிலான வர்த்தக முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகள் என்பன தேவைப்படுகின்றவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவிகளை வழங்குவதிலும், விவசாயக் கடன்கள் மற்றும் நுண் நிதி உதவிகள் மூலம் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் கொமர்ஷல் வங்கியின் 16 விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவுகளும் முக்கியமான பணியாற்றி வருகின்றன. மேலும் இந்தப் பிரிவுகள் விவசாயக் கடன்கள் மற்றும் நுண் நிதி என்பனவற்றை வழங்குவதில் அர்ப்பணத்துடன் பணியாற்றிவருகின்றன.

கொமர்ஷல் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதிப் பிரிவுகள் வங்கியின் இரத்தினபுரி, நாரம்மல, கண்டி, அநுராதபுரம், கிளிநொச்சி, பண்டாரவளை, வெல்லவாய, ஹிங்குராக்கொட, களேவலை, அச்சுவேலி, வவுனியா, காத்தான்குடி திஸ்ஸமஹாராம, நெலுவ, பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய கிளைகளிலும் செயற்படுகின்றது.