Back to Top

நன்சென் ஆய்வு கண்டறிதல்களை நோர்வே மற்றும் FAO வரவேற்பு

நன்சென் ஆய்வு கண்டறிதல்களை நோர்வே மற்றும் FAO வரவேற்பு

January 28, 2019  01:53 pm

Bookmark and Share
2018 ஆம் ஆண்டு இலங்கையில் நோர்வே ஆய்வு கப்பலான கலாநிதி. பிரிட்ஜொஃவ் நன்சென் மேற்கொண்டிருந்த ஆய்வின் பெறுபேறுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வை தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (NARA) மற்றும் நோர்வே, கடல்சார் ஆய்வுகள் நிறுவனம் (IMR) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நோர்வே ஆய்வு கப்பலான கலாநிதி. பிரிட்ஜொஃவ் நன்சென் இலங்கையின் கரையோர கடற்பகுதியில் 2018 ஜுன் 23 ஆம் திகதி முதல் ஜுலை 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூழல்கட்டமைப்பு ஆய்வொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. அபிவிருத்தி ஒன்றிணைவுக்கான நோர்வே முகவர் அமைப்பின் (Norad) நிதியுதவியின் கீழ் நோர்வே கடல்சார் ஆய்வுகள் நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட EAF-நன்சென் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த ஆய்வு அமைந்திருந்தது.

இலங்கையின் மீன்பிடித்துறையின் நிர்வாகத்திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை – நோர்வே இடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த பரஸ்பர உடன்படிக்கையின் பிரகாரம் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டதுடன், இலங்கையின் விஞ்ஞானிகளுக்கு பயிற்சிகளை பெற்றுக் கொடுத்திருந்ததுடன், கருத்துக்கணிப்புக்கு பின்னரான தரவு பகுப்பாய்வுகளையும் வழங்கியிருந்தது.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஆய்வின் நோக்கம், இலங்கையைச் சூழ காணப்படும் கடல்சார் வளங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, அதனூடாக இலங்கைக்கு மேம்படுத்திய தரவுகளை வழங்கி, எதிர்காலத்தில் நாட்டின் கடல்சார் வளங்களை சிறந்த முறையில் நிர்வகித்துக் கொள்வதற்கு பயனுள்ளதாக அமைந்திருப்பதாகும்.

இந்த ஆய்வு கண்டறிதல்களை வெளியிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டாட்சேதர் உரையாற்றும் போது, கடல்கள் தொடர்பான பரஸ்பர ஒன்றிணைவுக்கு நோர்வே தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், கடல் வளங்கள் தொடர்பில் தரவுகள் அடிப்படையிலான நிர்வாக செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டு, அதனூடாக கையிருப்பிலுள்ள மீன்கள் பற்றி சிறந்த முறையில் கண்காணிப்பதற்கு உதவியாக இருப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளதாக குறிப்பிட்டார்.

சமுத்திரங்கள் மற்றும் கடற்றொழில் தொடர்பான தகவல்கள் அடிப்படையிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த இலங்கையின் பங்காளர்களுக்கு இந்த ஆய்வின் கண்டறிதல்களை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை தூதுவர் கவுஸ்டாட்சேதர் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்கு சமுத்திரங்கள், கடல்கள் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாத்து நிலைபேறான வகையில் பயன்படுத்துவது பற்றிய விடயங்களைக் கொண்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 14 (SDG 14) இன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கைக்கான குயுழு பிரதிநிதி நினா பிரான்ட்ஸ்ரப் கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கையில் இந்த திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையானது FAO, நோர்வே மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஆகியவற்றுக்கிடையில் நீண்ட காலமாக பேணப்படும் உறவுகளை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் மாசு போன்ற பாரிய சவால்கள் மத்தியில் இலங்கைக்கு நிலைபேறான வகையில் கடற்றொழில் வளங்களை நிர்வகிப்பதற்கு FAO உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்த ஆய்வின் கண்டறிதல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளன.´ என்றார்.

1971 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி அமுலிலுள்ள இலங்கை மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையிலான கடற்றொழில் தொடர்பான நீண்ட கால அபிவிருத்தி ஒன்றிணைவை மேலும் உறுதி செய்வதற்கான ஒரு வாய்ப்பாக ஆய்வு கப்பல் கலாநிதி. பிரிட்ஜொஃவ் நன்சென் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. இலங்கையுடனான நோர்வே கடற்றொழில் ஒன்றிணைவு செயற்பாடுகளில், கடற்றொழில் முகாமைத்துவம், ஆய்வுகள் மற்றும் கல்வியறிவூட்டல் மற்றும் தனியார் துறை அபிவிருத்தி போன்றன அடங்கியுள்ளன. 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த செயற்பாடுகளுக்காக சுமார் 11.1 மில்லியன் நோர்வே குரோன்கள் (அண்ணளவாக 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டுள்ளன.

கால்நடை அபிவிருத்தி, விவசாயம் மற்றும் கடல்வளங்கள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிசன் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாரச்சி ஆகியோரும் இந்த ஆய்வின் முக்கியத்துவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்ததுடன், அவசியமான நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்த கண்டறிதல்களின் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டிருந்தனர்.

விவசாய, கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை அபிவிருத்தி, விவசாயம் மற்றும் கடல்வளங்கள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, IMR, NARA, இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசாங்க அதிகாரிகள் போன்றவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Most Viewed