Back to Top

 நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

January 31, 2019  03:04 pm

Bookmark and Share
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4 வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. விராட் கோலி, டோனி இல்லாததால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லை. அதேசமயம், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர்.

இந்நிலையில் இந்திய அணி 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 92 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதை அடுத்து 93 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் குப்தில் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன் பின்னர் கேப்டன் வில்லியம்சனையும் (11), விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார். ஆனால், 3 வது விக்கெட்டுக்கு இணைந்த, நிக்கோல்ஸ் - டெய்லர் ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

நிக்கோல்ஸ் 30 ஓட்டங்களும் டெய்லர் 37 ஓட்டங்களும் சேர்க்க, 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது நியூசிலாந்து. இதனால், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை மிரட்டிய டிரென்ட் போல்ட், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் 1-3 என நியூசிலாந்து பின்தங்கி உள்ளது. கடைசி போட்டி வெலிங்டனில் 3 ஆம் திகதி நடக்கிறது.

Most Viewed