Back to Top

 யானை தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு

யானை தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு

March 1, 2019  09:05 am

Bookmark and Share
திருகோணமலை - இறக்கக்கண்டி பகுதியில் யானை தாக்கி ஒரு பிள்ளையின் தந்தை நேற்று (28) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, இறக்ககண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய அப்துல் ஹஸன் றிஸ்வான் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று மாலை 4 மணியளவில் 51 வயதுடைய சாவுல் ஹமீட் உமர்தீன் என்பவருடன் கொம்பான்குளம் எனும் பகுதியிலுள்ள கச்சான் தோட்டத்திற்கு சென்று மீண்டும் அதே இடத்திலுள்ள குளத்துக்கு குளிக்கச் சென்ற போது யானை நின்றதாகவும், யானை என சொல்லிவிட்டு சென்ற போது இருவரையும் யானை துரத்தியதாகவும் அதை அடுத்து பயத்தில் இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு ஓடியதாகவும் உயிரிழந்த நபருடன் சென்ற சாவுல் ஹமீட் உமர்தீன் தெரிவித்தார்.

இதனை அடுத்து அயலிலுள்ள வயல் காரர்களை அழைத்து யானை விரட்டி விட்டு வீழ்ந்து கிடந்தவரை கொண்டு வந்ததாகவும் மேலும் அவர் கூறினார்.

உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(திருகோணமலை நிருபர் முபாரக்)