Back to Top

வடகொரிய தலைவருடன் மூன்றாவது சந்திப்பு?

வடகொரிய தலைவருடன் மூன்றாவது சந்திப்பு?

April 13, 2019  12:08 pm

Bookmark and Share
வடகொரியா தலைவருடனான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார்.

இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.

இந்த விவகாரம் குறித்து பேசி சுமுக தீர்வுகாண டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த பெப்ரவரி மாத இறுதியில் இருநாட்டு தலைவர்கள் வியட்நாமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதிர்பார்த்தபடி இந்த சந்திப்பு இணக்கமாக நடைபெறவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில், கிம் ஜாங் அன்னுடன் 3-வது முறையாக சந்திப்பு நடைபெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் இதனை தெரிவித்தார். அப்போது மூன் ஜே இன்னும் உடனிருந்தார்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் 3-வது சந்திப்பு நடைபெறலாம். ஆனால் இது வேகமாக நடைபெறும் செயல்முறை இல்லை.

படிப்படியாகத்தான் நடக்கும். கடந்த 2 சந்திப்புகளும் மகிழ்ச்சிகரமாகவும், உற்சாகமாகவும் நடந்தன. கிம் ஜாங் அன் உடனான பொழுது ஆக்கப்பூர்வமாக கழிந்தது.

நான், கிம் ஜாங் அன் மற்றும் மூன் ஜே இன் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதா என்றால், அதுவும் நடைபெறும் என்பேன் என்றார்.

Most Viewed