Back to Top

IPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி

IPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி

April 25, 2019  11:28 am

Bookmark and Share
12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42 வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது.

பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.

நாணயசுழற்சியை சென்ற பஞ்சாப் தலைவர் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதை அடுத்து முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது.

இருப்பினும் 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை தொட்டது. அதன் பிறகு ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஓட்டங்கள் மளமளவென எகிறியது.

முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் 200 ஓட்டங்களை தாண்டியது.

நிறைவில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது.

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ஓட்டங்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ஓட்டங்களும், லோகேஷ் ராகுல் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17 வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.

ஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ஓட்டங்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ஓட்டங்களிலும் பூரன் 46 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4 வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6 வது தோல்வியாகும்.