Back to Top

 IPL 2019 - இறுதி ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி

IPL 2019 - இறுதி ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி

May 9, 2019  01:25 pm

Bookmark and Share
12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3 வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4 வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது.

இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

இந்நிலையில் கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4 வது பந்தில் அமித் மிஸ்ரா (1 ஓட்டம்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது.

தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளி யேறியது.