Back to Top

நல்லாட்சியின் வீழ்ச்சி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது

நல்லாட்சியின் வீழ்ச்சி ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது

June 12, 2019  01:28 pm

Bookmark and Share
சிறுபான்மையினரின் வாக்குகள் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய கட்சியும் உருவாக்கியதாக கூறப்படும் நல்லாட்சி இன்று படுபாதாளத்தில் விழுந்து வீழ்ச்சியடைந்துள்ளதனை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் வவுனியா மாவட்ட கிராம தலைவர்கள், மாதர் சங்க தலைவிகள், சனசமூக நிலைய தலைவர்கள் மற்றும் விளையாட்டு கழக தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலின் போது பல வாக்குறுதிகளை வழங்கிய இன்றைய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் அரசியல் கட்சிகள் வழங்கின. அதே போல் பாராளுமன்றத் தேர்தலிலும் இவ்வாறான பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இருப்பினும் இவற்றில் ஒன்றையேனும் இவ் தமிழ் அரசியல் கட்சிகளால் நிறைவேற்ற முடியாது போயுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தமான அரசியலமைப்பு மாற்றம், சமஷ்டி முறைமை, வடகிழக்கு இணைப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களுக்கான தீர்வு, இராணுவ ஆக்கிரமிப்பு நில விடுவிப்பு போன்ற பல வாக்குறுதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வடகிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்டது. இவைகளில் ஒன்றையேனும் இவர்கள் நிறைவேற்றவில்லை என்பது மக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளார்கள்.

கடந்த நான்கு வருட பாராளுமன்ற காலத்தில் எவ்விதமான கட்டமைப்பு அபிவிருத்திகள் இடம்பெறவில்லை. வீடமைப்பு திட்டம் கைவிடப்பட்ட நிலையில் இன்று அரைகுறையாக அடிக்கல் நாட்டப்படுகின்றது. அரசாங்கம் வழங்கும் ஏழரை இலட்ச ரூபாவில் இன்று இருக்கும் விலைவாசியின் அடிப்படையில் வீடுகளை முழுமையாக கட்ட முடியாமல் மக்கள் இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளார்கள்.

இந்திய வீட்டுத்திட்டங்களை தமிழ் அமைச்சர்களுக்கு வழங்கியதை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எதிர்த்ததனால் இன்று அதனை நாம் இழந்துள்ளோம். எவ்விதமான பாதைகளும் செப்பணிடப்படவில்லை. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை. நீர்ப்பாசன திட்டங்கள் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை.

விவசாயிகளுக்கு எவ்விதமான மானியங்கள் கொடுக்கப்படவில்லை. சமுர்த்தி சரியான முறையில் தேவையானவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசாங்க உதவிகள் கிடைக்கப்படவில்லை. பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் இல்லை. மத்திய அரசாங்கத்தின் ஊடான தொழில் வாய்ப்புகளில் வடமாகாண இளைஞர் யுவதிகள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

இவ் அனைத்திற்கும் இன்றைய நல்லாட்சியின் பங்காளிகளாக இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். கடந்த அரசாஙகத்தின் போது வட மாகாண மக்களுக்கு கிடைத்த அபிவிருத்தியில் ஐந்து வீத அபிவிருத்திகளை கூட இவர்களால் செய்து காட்ட முடியவில்லை. தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் இன்று கம்பெரலிய திட்டத்தின் ஊடாக அவசர அவசரமாக சில கிராமங்களில் பாதைகள் போடப்படுகின்றது.

இவற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இதனால் நிதி ஒதுக்கீட்டுகளில் பாரிய ஊழல்கள் இடம்பெறுவதாக தெரிகின்றது. இவ்வாறான போலி அபிவிருத்திகளை தேர்தல் நெருங்கும் நேரத்தில் செய்து மீண்டும் மக்கள் ஆணையை பெறத்துடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திட்டத்தினை வன்னி மாவட்ட மக்கள் தெளிவாக புரிந்து கொண்டுள்ளனர்.

எனவே எனது இந்த செய்தியினை இங்கே வந்திருக்கும் கிராமமட்ட தலைவர்கள், இளைஞர்கள், யுவதிகள், மாதர்சங்க உறுப்பினர்கள் தங்கள் கிராமமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தின் ஊடாக வீட்டுத்திட்டங்களுக்கு பதினைந்து இலட்ச ரூபாய் நிதியினை நான் பெற்றுக் கொடுப்பேன். எதிர்காலத்தில் நேரமையான, ஊழலற்ற, விவேகம்மிக்க தலைமைத்துவத்தை வன்னி மாவட்ட மக்களுக்கு நான் வழங்குவேன் என அவர் தெரிவித்துள்ளார்.