Back to Top

கொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரி கொலை - சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி

கொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரி கொலை - சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி

June 12, 2019  04:32 pm

Bookmark and Share
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டடில் கைது செய்யப்பட்ட கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் சிறையில் வைத்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன் என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக தெரிய வந்ததையடுத்து குறித்த சடலத்தை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என். றிஸ்வான் முன்னிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காட்டி இடத்தை பெக்கோ இயந்திரம் மூலம் தோண்டப்பட்டபோது அங்கு எந்த மனித எச்சங்களும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சம்பவதினமான நேற்று இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் லிங்கன் என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் என்பவர் மலசலம் கழிப்பதற்கு மலசல கூடத்திற்கு கொண்டு சென்ற போது அங்கு நிலத்தை சுத்தப்படுத்த வைக்கப்பட்டிருந்த மருந்தை எடுத்து தற்கொலை செய்வதற்காக குடித்துள்ளார்.

இதனையடுத்து அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)

Most Viewed