Back to Top

சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை

சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை

June 26, 2019  10:14 pm

Bookmark and Share
பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் எதிர்ப்புக்களையும் முன்வைத்து தன்னை குற்றவாளியாக அடையாளப்படுத்துவதற்கு எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தாலும் நாட்டின் நலனுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நற்செயல்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டையும்  பிள்ளைகளையும் பாதுகாக்கும் கடமையை நிச்சயமாக நிறைவேற்றுவதாகவும் சவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதுடன், அதனை முன்னிட்டு இன்று (26) முற்பகல் கொலன்னாவ ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 23 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 01ஆம் திகதி வரை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் மூன்றாவது தினமாகிய இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் பிரதான நிகழ்வாக போதைப்பொருளுக்கு எதிரான பாரிய நடைபவனி ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ராஜகிரிய, முல்லேரியா, வெல்லம்பிட்டி, கொத்தொட்டுவ, கிரேன்பாஸ், தெமட்டகொட ஆகிய பிரதேசங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட  ஊர்வலம் இறுதியாக கொலன்னாவ ரஜமகா விகாரையை வந்தடைந்தது.

அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான பொதுமக்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கொலன்னாவ ரஜமகா விகாரையில் விசேட தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், போதைப்பொருள் பாவனையின் விளைவுகள் என்னவென்பது பற்றியும் தெளிவூட்டப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு தான் கடந்த நான்கு வருடங்களாக விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியதாகவும் அதனூடாக வெற்றிகரமான பிரதிபலன்கள் நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சியை உருவாக்குவதற்கும் ஆட்சியை கவிழ்ப்பதற்குமான திறன் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உள்ளதாகவும் போதைப்பொருளுக்கு எதிராக செயற்படும் நபர்களை இல்லாதொழிப்பதற்கான வலு தன்னிடம் இருப்பதாக தெரிவித்த, ஜனாதிபதி, விசாரணைகளின் ஊடாக எந்த தகவல்களை வெளிக்கொண்டு வந்தாலும், ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல், போதைப்பொருள் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கருத முடியுமென்றும் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸ்ஸம்மில், பிரசங்க சோலங்க ஆரச்சி, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன அபாயகர ஔடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பேராசிரியர் சமன் அபேசிங்க, பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது தினமான இன்று அரச அலுவலகங்களை மையப்படுத்தி விசேட நிகழ்ச்சிகள் பல நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் நான்காவது தினமான நாளை பாதுகாப்புத் துறையால் முன்னெடுக்கப்படும் நிகழ்சிச்சிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Most Viewed