
ஆஷஸ் டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 374 ஓட்டங்கள் குவிப்பு
August 4, 2019 01:07 pm
இங்கிலாந்து – அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 144 ஓட்டங்கள் அடிக்க, முதல் இன்னிங்சில் 284 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 125 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று ரோரி பர்ன்சும், பென் ஸ்டோக்சும் தொடர்ந்து விளையாடினர். சிறிது நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். ரோரி பர்ன்ஸ் 133 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ (8 ஓட்டங்கள்), மொயீன் அலி (0) நிலைக்கவில்லை.
9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிறிஸ் வோக்சும், ஸ்டூவர்ட் பிராட்டும் போராடி 350 ஓட்டங்களை கடக்க வைத்தனர். ஸ்டூவர்ட் பிராட் 29 ஓட்டங்களிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135.5 ஓவர்களில் 374 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியாவை விட 90 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கபமல் இருந்தார்.
அவுஸ்திரேலியா சார்பில் நாதன் லயன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளும், பேட்டின்சன், பீட்டர் சிடில் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
90 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.