Back to Top

செலான் வங்கி 2019 இன் 1 ஆம் அரையாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 1.5 பில்லியனை பதிவு செய்துள்ளது

செலான் வங்கி 2019 இன் 1 ஆம் அரையாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 1.5 பில்லியனை பதிவு செய்துள்ளது

August 12, 2019  08:54 am

Bookmark and Share
சவால்மிக்க சந்தை நிலைமைகள் மற்றும் அண்மையில் இலங்கையின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்திய எதிர்பாராத அசம்பாவிதங்கள் என்பவற்றுக்கு மத்தியில், செலான் வங்கியானது 2019 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் வரிக்கு முன்னரான இலாபமாக ரூபா 3,476 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் உறுதிமிக்கதொரு தொழிற்பாட்டை பதிவு செய்திருக்கின்றது.

2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வங்கி ரூபா 2,996 மில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தை பதிவு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறான உயர் பெறுபேற்றை இந்த அரையாண்டில் பெற்றுக் கொண்டுள்ளது. எவ்வாறிருப்பினும், 2018 ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து நாட்டில் நடைமுறைக்கு வந்த கடன் மீள்கொடுப்பனவு வரி (DRL) செலவான ரூபா 461 மில்லியன் காரணமாக செலான் வங்கியின் வரிக்குப் பின்னரான இலாபம் 0.89% இனால் மட்டுமே அதிகரித்துள்ளது.

ரூபா 8,656 மில்லியனாக முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்த வங்கியின் தேறிய வட்டி வருமானம் 2019 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த 6 மாத காலப்பகுதியில் ரூபா 8,886 மில்லியனாக, 2.65% இனால் அதிகரித்துள்ளது. முற்பணங்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் வினைத்திறனான விலையிடல் மூலோபாயம் ஆகியவற்றின் பெறுபேறாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. வங்கியின் மொத்த கட்டண அடிப்படையிலான வருமானம் கடந்த வருடத்தைப் போன்ற அதே மட்டத்தில் காணப்பட்டதுடன், ரூபா 2,048 மில்லியனாக காணப்பட்ட அதன் பெறுமதி 2019 இன் 1ஆம் காலாண்டில் ரூபா 2,057 மில்லியனாக சிறியளவில் அதிகரித்துள்ளது.

வணிக நடவடிக்கைகள், நிதிச் சொத்துக்களின் நியாயப் பெறுமான மாற்றங்கள், வெளிநாட்டு நாணயமாற்று பரிவர்த்தனையில் இருந்தான பெறுகை ஆகியவற்றை உள்ளடக்கிய ஏனைய வருமான தலைப்புக்கள் மற்றும் ஏனைய தேறிய தொழிற்பாட்டு வருமானம் ஆகியவை 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தேறிய வருவாய் ரூபா 609 மில்லியனில் இருந்து, 2019 இன் 1ஆம் அரையாண்டில் தேறிய வருவாய் ரூபா 762 மில்லியனாக 25.11% இனால் அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் 1 ஆம் அரையாண்டில் ரூபா 5,997 மில்லியனாக காணப்பட்ட வங்கியின் மொத்தச் செலவினங்களுடன் ஒப்பிடுகையில் 2019 ஜூன் 30 ஆம் திகதி முடிவடைந்த 6 மாதங்களில் மொத்தச் செலவினங்கள் ரூபா 6,398 மில்லியனாக 6.69% அதிகரிப்பொன்றை பதிவு செய்துள்ளது. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகள் தரமேம்படுத்தல், புதுப்பொலிவூட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு மற்றும் கிளைகளை தரமேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் காரணமாகவே செலவினங்களில் மேற்படி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. வங்கியானது இக் காலப்பகுதியில் எழும் நடைமுறைக் கிரயங்களைக் குறைப்பதற்காக பல கிரயக் குறைப்பு முன்முயற்சி திட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

செலான் வங்கியானது 2019 இன் 1ஆம் அரையாண்டு காலப்பகுதியில் மிதமான அடிப்படையில் 5.22% தேறிய கடன் வளர்ச்சியொன்றை பதிவு செய்திருக்கின்ற அதேநேரத்தில், தேறிய முற்பணங்களின் பெறுமதி ரூபா 326,882 மில்லியனில் இருந்து ரூபா 343,936 மில்லியனாக அதிகரித்துள்ளது. செயற்படா சொத்துக்கள் (NPA) வீதமானது இக் காலப்பகுதியில் 0.5% இனால் அதிகரித்திருக்கின்றது.

2018 டிசம்பரில் ரூபா 357,560 மில்லியனாக காணப்பட்ட வங்கியின் ஒட்டுமொத்த வைப்புத்தளம், 2019இன் 1 ஆம் அரையாண்டில் ரூபா 374,708 மில்லியனாக அதிகரித்து இருக்கின்றது. வங்கியின் CASA (நடைமுறை மற்றும் சேமிப்பு வைப்புக்கள்) வீதம் 27.91% ஆக உயர்ந்த மட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆறு மாத காலப்பகுதியில், குறைந்த கிரய வைப்புக்களில் இருந்து – உயர் ஆதாயத்தை ஈட்டித்தரும் நிலையான வைப்புக்களை நோக்கியதான மாறுதல் போக்கு அவதானிக்கப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட வங்கி இந்த அடைவைப் பெற்றுக் கொண்டுள்ளது.

செலான் வங்கி தனது கிளை வலையமைப்பை விஸ்தரிக்கும் நடவடிக்கையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆறு மாத காலப்பகுதியில் யூனியன் பிளேஸ், பாதுக்க மற்றும் கொடகவல ஆகிய இடங்களில் வங்கி 3 புதிய கிளைகளை திறந்து வைத்துள்ளது. 2019 ஜூன் 30ஆம் திகதி இருந்தபடி வங்கியின் கிளை வலையமைப்பானது 173 வங்கியியல் நிலையங்களையும் 212 ATM நிலையங்களையும், 98 மாணவர் சேமிப்பு மையங்களையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அதேவேளை வங்கி பணவைப்பு இயந்திரங்களின் (CDMs) எண்ணிக்கை 40 ஆக விஸ்தரித்தரிக்கபட்டிருக்கின்றது.

2019 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலப்பகுதியில் செலான் வங்கியின் பங்கொன்றிற்கான உழைப்பு (EPS) ரூபா 4.05ஆக காணப்பட்டது. மேலும், சராசரிச் சொத்துக்கள் மீதான (வரிக்கு முன்னரான இலாபம்) வருவாய் (ROAA) 0.89% ஆகவும், உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 8.51% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 ஜூன் 30ஆம் திகதி இருந்தவாறு வங்கியின் பங்கொன்றுக்கான தேறிய சொத்துப் பெறுமதி ரூபா 99.08 ஆக (குழுமம் ரூபா 103.25) பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Viewed