Back to Top

இராணுவத்தால் துயிலும் இல்லத்தில் நடைபெறும் கட்டுமானப் பணி உடன் நிறுத்தப்பட வேண்டும்

இராணுவத்தால் துயிலும் இல்லத்தில் நடைபெறும் கட்டுமானப் பணி உடன் நிறுத்தப்பட வேண்டும்

August 13, 2019  11:16 am

Bookmark and Share
இராணுவத்தால் துயிலும் இல்லத்தில் நடைபெறும் கட்டுமானப் பணி உடன் நிறுத்தப்பட வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விஸ்வமடு தேராவில் துயிலும் இல்ல வளாகத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இது ஓர் சுமூகமான சூழ்நிலைக்கு எதிரான ஒன்றாக நான் கருதுகின்றேன்.

இதனை உடனடியாக நிறுத்தி நிலைமைகளை சீர் செய்ய வேண்டும். யுத்தத்தில் இறந்த வீரர்ககளை ஒவ்வொரு வருடமும் அமைதியான முறையில் நினைவு கூர்ந்து அஞ்சலி செய்து வருவதனை அனைவரும் அறிந்த விடையம். இனவாதிகளை பொறுத்தவரை அவர்கள் புலிப் பயங்கரவாதிகள்?? ஆனால் அவர்கள் அனைவரும் எமது உறவுகள், எங்களின் பிள்ளைகள், அவர்களின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று. அவர்களை வருடத்தில் ஒரு நாள் நினைவு கூர்ந்து வருகின்றோம்.

எமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட புனித பூமியில் இராணுவத்தினர் நிரந்தர கட்டிடங்களை அமைப்பது மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலாகவே நான் பார்கின்றேன். முதலில் இவ்வாறான கடும்போக்கு வேலைகளை நிறுத்தி மக்களின் மனங்களை வெல்லப் பாருங்கள் அதனை விடுத்து தொடர்ந்தும் இவ்வாறான செயல்களை முன்னெடுத்து நீங்களே மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளிகளை அதிகர்த்து செல்கிறீர்கள் துயிலும் இல்லம் என்பது எங்களுக்கு கோவில் நாங்கள் பூசிக்கவே செல்கின்றோம்.

கடந்த காலத்தில் கல்லறைகளை கனரக வாகனங்கள் கொண்டு உடைத்தீர்கள் அவற்றை தாங்கிக் கொண்டோம் வழிபாட்டு இடம்போன்று கண்காணித்து வரும் இப் பூமியில் நிரந்தரக் கட்டிடம் அமைப்பதனை உடனே நிறுத்த வேண்டும். இல்லை எனில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். இவை தொடர்பில் தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தி நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை செய்ய உள்ளேன் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)

Most Viewed