Back to Top

பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது

பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது

August 20, 2019  07:29 pm

Bookmark and Share
எவ்வாறான பிரச்சினைகள் நிலவினாலும் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில் அமைச்சிக்குரிய புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறினார்.

நான்காவது தொழில் புரட்சியில் மனிதவளம் மற்றும் இயந்திரங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர் அதற்கேற்ப தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஐந்து வருடங்களில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு முக்கியதுவமளித்த நாடாக இலங்கை காணப்படுவதாகவும் பொருளாதார ஒழுங்கமைப்பு விடயங்களில் பல்வேவறு பிரிவுகளின் ஆலோசனைகளும் பெறப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

தற்போதும் நாடு கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஆனால் எவ்வாறான பிரச்சினைகள் நிலவினாலும் நாட்டு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள சகல பகுதிகளிலும் வருமானம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் கூறினார்.

பிரச்சினைகள் எதுவானாலும் இன்றைய சூழலில் மக்களுக்கு வாழ அதிக வருமானம் தேவை என்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஆரம்பகாலத்தில் உணவை மட்டும் மையமாகக் கொண்ட ஒரு சமூகம் இருந்ததாகவும் ஆனால் இன்று கையடக்கதொலைபேசி கட்டணம், மேலதிக வகுப்புகளுக்கான கட்டணம் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

ஆகவே செலவுக்கேற்ற வருமானம் இருந்தாலே இவற்றை சமாளிக்க முடியும் எனவும், அதற்கு உற்பத்திகளை அதிகரித்து கொள்ளவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.

எனவே பிரச்சினைகள் எதுவாக இருப்பினும் நாட்டு மக்களின் வருமானத்தை அதிகரித்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.