Back to Top

Ad

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி கைது

பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சகோதரி கைது

August 20, 2019  08:54 pm

Bookmark and Share
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனோர் சந்தியில் வென்னப்புவ பொலிஸ்  அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5.15 மணி அளவில் அதிக வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்தபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான பெண்ணிற்கு சாரதி அனுமதிப் பத்திரமோ அல்லது ஏனைய அனுமதிப்பத்திரங்களோ இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண், பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சகோதரி எனவும் குறித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றுமொரு சகோதரி மற்றும் தந்தையுடன் அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றில் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவ்விடத்திற்கு வருகை தந்தவர்கள் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை விளைவித்து பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தேக நபர் மற்றும் மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முயற்சி செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது

இதன்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளால் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிளையும் பின்னர் வந்த மோட்டார் சைக்கிளையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன் போது சந்தேக நபரான பெண் அங்கு வருகை தந்து அவரது குடும்பத்தாருடன் வேனில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இன்று மாரவில நீதவான் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது .

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூவர் மற்றும் சந்தேகநபருக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து குறித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 வயதான தும்மோதர  பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரான துலக்ஷி சமோதரி பெர்ணான்டோ மற்றும் அவரது 16 வயதுடைய சகோதரி நிமாஷா நவன்ஜலி பெர்ணான்டோ ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.