Back to Top

இஸ்ரோ தலைவர் சிவன் தாய், தந்தை இறந்த போது கூட கண்ணீர் விட்டு அழவில்லை

இஸ்ரோ தலைவர் சிவன் தாய், தந்தை இறந்த போது கூட கண்ணீர் விட்டு அழவில்லை

September 9, 2019  11:20 am

Bookmark and Share
"தனது தாய், தந்தை இறந்த போது கூட வருத்தப்பட்டாரே தவிர, கண்ணீர் வரும் அளவுக்கு சிவன் அழுதுவிடவில்லை. இந்த முயற்சி (சந்திரயான் 2) முழு வெற்றி அடையவில்லை என்று சிவன் அழுவதை பார்த்த போது மனம் கலங்கினோம்," என இஸ்ரோ தலைவர் சிவனின் உறவினரும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியருமான ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சிவனின் தாயார் இறந்த போது, இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு சிவன் சொந்த ஊர் சென்றுள்ளார். தாயின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர், வீட்டுக்கு வந்தவுடன் இஸ்ரோவில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வரவே உடனடியாக பணிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார் என்று ரமேஷ் கூறினார்.

இந்தியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 திட்டம் ஒரு பின்னடைவை சந்தித்தது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்தாலும், இஸ்ரோ மற்றும் அதன் விஞ்ஞானிகள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.

செப்டம்பர் 7ஆம் திகதி சந்திரயானின் விக்ரம் லேண்டரிலிருந்து தொடர்பு துண்டக்கப்பட்டது என தழுதழுத்த குரிலில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதும், அதன்பின் கண்ணீர் சிந்திய சிவனை இந்திய பிரதமர் மோதி கட்டியணைத்து தேற்றியதும் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டன.

இன்று பெரும் பாராட்டுகளை பெற்றுவரும் இஸ்ரோவின் தலைவர் சிவன் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமாரியை சேர்ந்தவர்.

அவர் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்.

நாகர்கோவிலில் உள்ள சரக்கல்விளையில் பிறந்த சிவன், பள்ளி விடுமுறை நாட்களில் தனது தந்தைக்கு உதவி செய்ய விவசாயத்தில் ஈடுபட்டதாகவும் அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இவரது தந்தை கைலாசவடிவு மாங்காய் விற்றதோடு, அவர்களுக்கு இருந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

கணிதத்தை முக்கிய பாடமாக எடுத்து கல்லூரி படிப்பை தொடர்ந்தார் சிவன். நான்கு பாடங்களில் 100 சதவீதம் எடுத்து வெற்றி பெற்ற சிவன், எம்ஐடியில் (மெட்ராஸ் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி) சேர குடும்பத்தின் ஏழ்மை குறுக்கிட்டது. சிவனை எம்ஐடிக்கு அனுப்ப, கால் ஏக்கர் நிலத்தை அவரது தந்தை விற்க வேண்டியதாயிற்று.

எம்ஐடியில் சேர்ந்தததில் இருந்து ஆய்வில் சிறந்து விளங்கிய சிவனின் எதிர்காலமே மாறியது.

1980ம் ஆண்டு, சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியல் பாடத்தில் இளங்கலை பொறியியல் பட்டத்தையும், 1982ம் ஆண்டு பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளிப் பொறியியல் பாடத்தில், முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்றார்.

1982-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிவன் பணியில் சேர்ந்தார்.

2006ம் ஆண்டு மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

"சந்திராயன் 2 திட்டம் தோல்வி கிடையாது. சின்ன சறுக்கல் அவ்வளவுதான். நிலவை இந்த அளவுக்கு நெருங்கியதையே வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும். இஸ்ரோவை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தி வரும் சிவன் தலைமையில், இந்த சாதனை வெகுவிரைவில் நிகழும் என்று நம்புகிறோம். என்கிறார் இஸ்ரோ தலைவர் சிவனின் சொந்த அண்ணன் மகள் நிஷா.

"சந்திரயான் 2 திட்டம் முழு வெற்றியடையவில்லை என்பதை அறிந்தவுடன் அப்படியே உடல் முழுவதும் வியர்த்து நாற்காலியில் சாய்ந்துவிட்டேன்."

"காமராஜர் இறந்தபோது அடைந்த துக்கத்தை எனது வாழ்நாளில் இப்போதுதான் அனுபவித்தேன். என்னுடன் படித்த சிவன் தலைமையில் நடந்த இந்த திட்டம் வெறும் 2 கிலோமீட்டருக்கு முன்னால் தொடர்பு துண்டித்துவிட்டதே என்று கலங்கினேன்," என்கிறார் சிவனுடன் 12ம் வகுப்பு வரை படித்த சங்கரலிங்கம்.

"வெற்றிபெற்றால் சரக்கல்விளை ஊருக்கே பெருமை என்பதால், 1000 பேருக்கு அன்னதானம் கொடுக்க வேண்டுமென நினைத்திருந்தோம். ஆனால், முழு வெற்றியடையாததாது கவலையே. முழு வெற்றியடைந்து பிரதமர் மோதி அணைத்து பாராட்டியிருந்தால் இன்னும் அதிகம் மகிழ்ந்திருப்போம்," என்றார் சங்கரலிங்கம்.

"செப்டம்பர் 7ம் திகதி நள்ளிரவு 12.30 மணியில் இருந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த நேரலையை பார்த்து கொண்டிருந்தோம். நிலவில் லேண்டர் தரையிறங்கிவிட்டால் அன்றே காலை பட்டாசு வெடித்து விழாவாக கொண்டாட வேண்டும் என்றும், பள்ளிக்கூடத்துக்கு சென்று இனிப்புகள் வழங்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தோம்," என்று சுகாதர துறையில் பணியாற்றும் சிவனின் நண்பர் மதன் குமார் தெரிவித்தார்.

ஏறக்குறைய அதிகாலை 2 மணி அளவில் லேண்டரில் இருந்து சிக்னல் வரவில்லை என்று தெரிவித்தவுடன் மிகவும் ஏமாற்றம் அடைந்தோம். மனதுக்கு கஷ்டமாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.

"ஆனால், பிரதமர் நரேந்திர மோதி சிவனை அணைத்து தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமர் தட்டிகொடுத்தது இந்தியாவே தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்தது போல இருந்தது. விரைவில் சிவன் தலைமையில் இந்த திட்டம் முழு வெற்றி அடையும்," என்று நம்பிக்கை தெரிவித்தார் மதன் குமார்.

"அவரது ஒவ்வொரு வெற்றியிலும் நாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம். சின்ன வயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர் சிவன் என்று எனது அப்பா அடிக்கடி சொல்லியிருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்தது இப்போது நடக்கவில்லை. ஆனால் சிவன் மீதும், இஸ்ரோ மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. விரைவில் இதில் வெற்றி காண்பார் என உறுதியாக நம்புகிறோம்," என்று பேராசிரியர் ரமேஷ் கூறினார்.

(பிபிசி தமிழ்)

Most Viewed