Back to Top

 பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான்...

பிக்பாஸ் வீட்டில் நடந்தது இதுதான்...

September 10, 2019  10:36 am

Bookmark and Share
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த எட்டுப் பேர் தன்னைக் குழுவாகச் சேர்ந்துகொண்டு துன்புறுத்தியதாகவும் அதனை நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல் தட்டிக் கேட்கவில்லை என்றும் நடிகை மதுமிதா குற்றம்சாட்டியிருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டது. அதற்குப் பிறகு, மதுமிதாவும் விஜய் டெலிவிஷனும் பரஸ்பரம் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுமிதா, நிகழ்ச்சியில் பங்குபெற்று வீட்டிற்குள் இருப்பவர்கள் மீது சரமாரியாக புகார் சுமத்தினார்.

காவல்துறையில் நீங்கள் ஏன் புகார் அளித்தீர்கள் எனக் கேட்டபோது, "நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும் என்னை பேட்டி கொடுக்கவிட மறுக்கிறார்கள் என்பதால்தான் புகார் அளித்தேன். எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால், நான் பேட்டி கொடுக்க விரும்பினேன். பணம் கொடுக்கும் அன்றே பேட்டிக்கு ஏற்பாடு செய்வதாக விஜய் டிவியில் சொன்னார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. அதற்கு பிறகு எத்தனை நாள் வீட்டிற்குள்ளேயே அடங்கிக் கிடப்பது?

பிக் பாஸ் என்பது மிகவும் மன அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு விஷயம். அதிலும் நான் இந்த முறையில் (வலுக்கட்டாயமாக) வெளியில் வந்திருக்கிறேன். எத்தனை நாள் முடங்கிக் கிடப்பது? முதலில் விஜய் டிவியிடம் பேச விரும்பினேன். அப்படி நடக்கவில்லை. பிறகு யாரிடமும் பேசக்கூடாது என்றார்கள். அதனால்தான் காவல்துறையில் சொன்னேன். அது திரித்து வெளியாகிவிட்டது" என்றார்.

"ஒவ்வொருவரும் வாட்ஸப்பில் ஸ்டேடஸ் வைப்பதுபோல தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துங்கள் என்று அன்று காலையில் சொன்னார்கள். ஒவ்வொருவரும் ஏதேதோ சொன்னார்கள். நான் ஒரே ஒரு வரிக் கவிதையைச் சொன்னேன். ´வருண பகவானும் கர்நாடகத்தைச் சேர்ந்தவரோ, மழைவடிவத்தில்கூட தண்ணீரை தமிழகத்திற்குத் தர மறுக்கிறார்´ என்றேன். இதில் எங்கே அரசியல் வந்தது? இதை அரசியல் ஆக்கியவர்கள் எட்டு பேர். அதை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கிவிட்டார்கள்.

நான் தேவையில்லாத விஷயத்தை பேசாதீர்கள் என்றேன். இதனை வெளியிடுவது குறித்து சேனல் முடிவுசெய்யட்டும் என்றேன். சேரனும் கஸ்தூரியும் நான் விரும்புவதை பேசட்டும் என்றார்கள். பிறகு, சேனலில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ´அரசியல் பேசாதீர்கள். அது ஒளிபரப்பாகாது´ என்றார்கள். அதற்குப் பிறகு அந்த எட்டு பேரும் என்னை ´கேங் ராகிங்´ செய்தார்கள். கஸ்தூரியும் அதில் பாதிக்கப்பட்டார். அதில் என் மனநிலை முழுவதுமாக பாதிக்கப்பட்டு, கையை அறுத்துக்கொண்டேன்.

அதற்குப் பிறகு எட்டுப் பேரிடமும் ஏதோ பேசினேன். அது என்னவென்று எனக்கு நியாபகம் இல்லை. கையில் ரத்தம் கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும் சிலர் சிரித்தார்கள். பிறர் பேசாமல் இருந்தார்கள். சேரனும் கஸ்தூரியும்தான் ´உயிரோட மதிப்பு தெரியாதா?´ எனக் கத்தினார்கள்.

எனக்கு ரத்த அழுத்த குறைபாடு உண்டு. நான் சண்டை போடும்போதுகூட ரத்த அழுத்தம் மிகக் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், நான் கையை அறுத்துக்கொண்ட பிறகு எனக்கு பெரிய அளவில் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொந்னார்கள். கைக்கு வைத்தியம் பார்ப்பதைவிட, ரத்த அழுத்தத்தை குறைக்கத்தான் மருத்துவர் முயன்றார். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.

அதற்குப் பிறகு சேனலைச் சேர்ந்த பிரதீப் நான் என்ன பேசினேன் என்பதைச் சொன்னார். ´என்னுடைய தமிழ்நாட்டுக்காக நான் சொன்ன ஒரு வரிக் கவிதைக்கு என்னை எவ்வளவு இழிவு படுத்துவீர்கள்? அந்த கவிதையில் என்ன தப்பு? அதைத் தப்பென்று சொல்லிவிட்டு என் ஊரில் வாழும் எல்லோரையும் மக்களுக்கு அடையாளம் காட்டாமல் விட மாட்டேன்னு´ சொல்லியிருக்கேன்.

நான் காயமடைந்து வெளியில் வந்ததற்கு அடுத்த நாள், காலையில் பாட்டு போடும்போது எதுவுமே நடக்காததுபோல உள்ளே இருப்பவர்கள் ஆடுகிறார்கள். அந்த நாள் முழுக்க சாதாரணமாகத்தான் இருந்தார்கள். அடுத்ததாக கமல் அருகில் நான் நிற்கும்போதுகூட வீட்டிற்குள் இருந்தவர்கள் யாரும் மன்னிப்புக் கேட்கவில்லை" என தான் கையை அறுத்துக் கொண்ட தினத்தில் நடந்ததை மதுமிதா விவரித்தார்.

இந்த சம்பவத்தின்போது கமல் சரியாக நடந்துகொண்டாரா என செய்தியாளர்கள் கேட்டபோது, "கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும்கூட அவர்கள் அவரை வெறும் தொகுப்பாளராகப் பார்க்கவில்லை. கட்சித் தலைவராக, ஒரு மிகப் பெரிய ஜாம்பவானாக பார்க்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முழுமையாகக் கண்காணிக்க அவர் தரப்பில் யாரையாவது நியமித்து, முழுக்க பார்த்து முடிவெடுக்க வேண்டும்" என்றார் மதுமிதா.

எட்டுப் பேர் மீது வழக்கு போடுவீர்களா என்று கேட்டபோது, "கமல் இதைக் கேட்பார் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. தவிர, வழக்குத் தொடர்ந்து தண்டனை வாங்கிக் கொடுப்பதால் இவர்கள் திருந்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உள்ளே இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறையில்லை" என்றார்.

விஜய் டிவிக்கும் எனக்கும் இடையில் பிரச்சனை ஏதும் இல்லை. சேனல் மீது வழக்கு தொடர மாட்டேன். மக்கள் பொது நல வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். அது வேண்டாம். இந்த விவகாரத்திலேயே அந்த எட்டுப் பேரின் முகத் திரை கிழிந்துவிட்டது. இதுவே தண்டனை.

எட்டுப் பேரில் ஒருவர் காமெடி ஹீரோ, இன்னொருவர் காதல் மன்னன். இன்னொருத்தர் வீரன், இன்னொருத்தர் பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி அழகால் கவரும் ஹீரோ. இன்னொரு பெண் மிகப் பெரிய ஆர்மியை வைத்திருப்பவர். இவர்கள் யாருமே ஏதும் இந்த விவகாரத்தில் ஏதும் செய்யவில்லை.

திரும்ப அந்த வீட்டிற்குள் செல்லும்படி கேட்டால் செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் கையை அறுத்துக்கொண்டபோது நடந்தவற்றைக் குறும்படமாக போடும்படி கேட்டேன். அதற்கு மறுத்துவிட்டார்கள். அப்படியானால் என்னை ஒரு நாள் உள்ளே அனுப்புங்கள் என்று கேட்டேன். அவர்கள் அனுப்பவில்லை.

நான் மருத்துவமனையில் இருந்தபோது, சேரன் வந்து பார்த்தார். உள்ளே இருந்து போராட வேண்டுமெனச் சொன்னார். அப்போதுதான் எனக்கும் அப்படித் தோன்றியது. அதனால், நான் என்னை உள்ளே அனுப்புங்கள். காயம் வெளியில் தெரியாமல் இருக்க கையை மறைக்கும் வகையில் ஆடை கொடுங்கள் என்றுகூட சொன்னேன். இருந்தபோதும் என்னை ஏன் வலுக்கட்டாயமாக வெளியில் அனுப்பினார்கள் எனத் தெரியாது.

தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்பவர்களை, பொருட்களை சேதப்படுத்துபவர்களை வெளியில் அனுப்புவார்கள் என்றால், அங்கிருந்த பொருட்களைச் சேதப்படுத்தி, தன்னைத் தானே சேதப்படுத்திய முகினை வெளியில் அனுப்பியிருக்க வேண்டும். ஏன் என்னை மட்டும் வெளியில் அனுப்பினார்கள்? மறுபடியும் அழைத்தால் போக மாட்டேன்" என்றார் மதுமிதா.

இந்த நிகழ்ச்சியை கமல் முழுமையாகப் பார்த்தால்தான் எனக்கு நேர்ந்த கொடுமை மற்றவர்களுக்கு நடக்காது என்று குறிப்பிட்டார் மதுமிதா. இந்தப் போட்டியில் சேனல் எல்லோரையும் சமமாக நடத்தியதா எனக் கேட்டபோது, தன்னை வில்லியாக காட்ட முயற்சித்ததாக மதுமிதா குற்றம்சாட்டினார்.

"சில பகுதிகளைப் பார்க்கும்போது என்னை அவர்கள் வில்லியாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. மக்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையினால்தான் நான் உள்ளே இருந்தேன். இது ஸ்க்ரிப்ட் எழுதி நடத்தப்படும் ஷோ அல்ல. ஆனால், நான் அதிகம் கத்துவதால், என்னைக் கெட்டவளாகக் காட்ட முயற்சித்திருக்கலாம்."

நம் ஊரைச் சாராத ஒருவரைத்தான் வெற்றிபெற வைக்கப்போகிறார்கள் என்பது தெரிந்துவிட்டதாகவும் இப்படிப்பட்டவர்களை வெற்றிபெறச் செய்தால் நாட்டிற்கு அசிங்கம் என்றும் மதுமிதா குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக விஜய் டிவியை தொடர்பு கொண்டபோது இது நாங்கள் ஏற்பாடு செய்த நேர்காணல் என்றும் மதுமிதாவின் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.