Back to Top

 நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் மண்சரிவு அபாயம்

September 17, 2019  02:43 pm

Bookmark and Share
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மஸ்கெலியா பெயர்லோன் தோட்டத்தில் சின்ன சூரியகந்த பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 36 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தோட்டத்தில் உள்ள சிறுவர் பாராமறிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்க வைக்கபட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம சேவகர் ஊடாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகிய இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை, தொடர்ச்சியாக நீரேந்தும் பிரதேசங்களுக்கு மழை பெய்து வருவதனால் காசல்ரி, மவுசாகலை, கெனியோன், லக்ஷ்பான, நவலக்ஸபான, விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

காசல்ரி நீர்தேக்கத்தின் நீரேந்தும் பகுதியில் அதிகமான மழை வீழ்ச்சி கிடைத்துள்ளமையினால் வான் அளவு நீர் பாய்வதற்கு இன்னும் நான்கு அடி மாத்திரம் இருப்பதாகவும் இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ், தாழ் நிலப் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக மலையகத்தின் பல பகுதிகளுக்கு மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, தியகல வழியாக மஸகெலியா ஆகிய வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதனால் இவ்வீதிகளை பயன்படுத்து சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

(மலையக நிருபர் சுந்தரலிங்கம்)

Most Viewed