Back to Top

பொலிஸ் மா அதிபரின் மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு

பொலிஸ் மா அதிபரின் மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு

September 17, 2019  03:52 pm

Bookmark and Share
தனக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றால் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

குறித்த மனு இன்று (17) பிரசன்ன ஜயவர்தன, பிரீதி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துறைராஜா ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் அழைக்கப்பட்டது.

இதன்போது, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், குறித்த மனுவினை விரைவில் பரிசீலனை செய்வதற்கு திகதி ஒன்றை அறிவிக்குமாறு அவர் சார்பில் ஆஜர் ஆன சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.

அதன்படி, மனுவினை பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி அழைப்பதாக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தனக்கு கட்டாய விடுமுறை வழங்கியமை மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சபாநாயகர், அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்கள், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தீர்மானம் முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானது எனவும் தனக்கு கட்டாய விடுமுறை வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை அடிப்படையற்றது எனவும் குறித்த மனுவை விசாரணை செய்த முடியும் வரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை தற்காலிகமாக இடை நிறுத்துவதற்காக தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மனுவை விசாரணை செய்து முடியும் வரையில் தன்னை பதவியிலிருந்து நீக்குவதை தடுப்பதற்காக தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed