Back to Top

இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய தமிழர்

இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இந்திய தமிழர்

October 3, 2019  12:24 pm

Bookmark and Share
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நாட்டுக்காக களமிறங்கும் 101-வது வீரர் இவர்.

அவரது பெயர் செனூரன் முத்துசாமி.

என்ன தமிழ் பெயர் போல இருக்கிறதா?

ஆம். தமிழ் பெயர்தான். தமிழர்தான்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட தென்னாப்பிரிக்கா வீரர். துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகல துறை வீரராக வலம் வரும் முத்துசாமி டர்பனில் பிறந்தவர்.

25 வயதாகும் செனூரனின் குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த செனூரன் முத்துசாமி, தனது பூர்வீகம் சென்னை என்றும், நாகப்பட்டினத்தில் உறவினர்கள் உள்ளனர் என்றும் கூறுகிறார்.

"தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பனில் வசிக்கிறோம். அங்கே எங்களது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். என்னுடைய குடும்பத்தில் இன்னமும் சிலர் தமிழ் பேசுகிறார்கள். துரதிருஷ்டவசமாக எனக்கு தமிழ் பேசத்தெரியாது. ஆனால் மெல்ல மெல்ல தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் செனூரன் முத்துசாமி.

முத்துசாமி பிரதானமாக ஒரு சுழற்பந்து வீச்சாளர். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டத்திலும் அசத்தியிருக்கிறார்.

தமக்கு இலங்கையைச் சேர்ந்த ரங்கனா ஹேரத், சங்கக்கார ஆதர்சம் என்கிறார் செனூரன்.

உள்ளூர் போட்டிகளில் ஒரு பக்கம் விக்கெட் வீழ்த்திக்கொண்டே எதிரணியின் ஓட்ட வேகத்தையும் கட்டுப்படுத்தி இருக்கிறார்.

முதல் தர கிரிக்கெட்டில் 69 போட்டிகளில் 3403 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். பந்துவீச்சில் 129 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு சிறந்த வீரர் விருதையும் வென்றிருக்கிறார்.

Most Viewed