Back to Top

வடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது

வடக்கு ஊடகங்கள் செய்திகளை திரிபுபடுத்துகின்றது

November 13, 2019  10:06 pm

Bookmark and Share
வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்திலிருந்து வெளிவரும் சில அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுக்கு சொந்தமான ஊடகங்கள் கடந்த ஐந்து தினங்களாக செய்திகளை திரிபுபடுத்தி மக்களை திசைதிருப்ப முயல்வதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

எமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சொல்லாத, பேசாத பல விடயங்களை கடைசி நேரத்தில் தங்களது பத்திரிகையின் ஊடாக வெளிப்படுத்தி வடமாகாண தமிழ் மக்களின் மனங்களை மாற்ற முயல்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ள கிராம மட்ட தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக மேலும் உரையாற்றிய அவர், தான் பதவிக்கு வந்த பின் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விடமாட்டேன் என்று கோட்டாபய ராஜபக்ஷ எவ்விடத்திலும் கூறியதில்லை. தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கு தேவையில்லை என்றும் அவரேகூறியதில்லை. அவருக்கு எதிரான தென்னிலங்கையில் கடத்தல் சம்பந்தமான விடயங்கள் பொய்யானவை என தெரியவந்துள்ள நிலையில் அவற்றை பெரிதுபடுத்தி ஊடக தர்மத்தை மீறியுள்ளன. இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வார்த்தைகளை நம்பி வடக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை.

மக்கள் சுயமாக சிந்தித்த வாக்களிப்பதற்கு தயாராக உள்ள நிலையில் தமது இயலாமையை மறைப்பதற்காக இவ்வாறான பொய்யான செய்திகளை முன்னிலைப்படுத்துகின்றார்கள். மக்கள் ஏற்கெனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.

இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுத்து வரும் பொதுக் கூட்டங்களில் நூறுபேர் கூட கலந்து கொள்வதில்லை என்பதை கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

தோல்வியின் விழிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கின்றார்கள். 2015ம் ஆண்டு அவர்கள் குறிப்பிட்ட நல்லாட்சியை உருவாக்கியும் எவ்விதமான தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாமல் வெறும் கம்பெரலிய திட்டத்தினை வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். கம்பெரலிய திட்டங்களிலும் கூட பாரிய நிதி மோசடிகள் இடம்பெறுவதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க சொல்வதற்கு இவர்களுக்கு எந்த அறுகதையும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக செயல்பட்ட சஜித் பிரேமதாஸ தமிழ் மக்கள் சார்பான ஏதாவது ஒரு விடயத்தை கூட கடந்த ஐந்து வருடகாலமாக பேசியதில்லை. மாறாக தமிழ் மக்கள் மீதான புதிய பாசம் வந்து விட்டது போன்று நடிக்கின்றார் என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு வந்திருக்கும் நூற்றுக்கணக்கான கிராம மட்ட தலைவர்கள் எனது செய்தியினை தமது கிராம மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். தேர்தல் இறுதி கட்ட நேரத்திலே சேறு பூச முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான ஊடகங்களின் உண்மை தன்மையை மக்களுக்கு பகிரங்கபடுத்த வேண்டும்.

வெற்றி பெறும் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து வன்னி மாவட்ட தமிழ் மக்களும் அவ்வெற்றியில் பங்காளியாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Viewed