Back to Top

 MCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை

MCC இற்கு எதிரான மனு ஜனவரி 31 ஆம் திகதி விசாரணை

November 13, 2019  11:42 pm

Bookmark and Share
அமெரிக்க அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக்கொள்ள தயாராகும் "Millennium Challenge Corporation" திட்டத்தின் கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடத் தயாராகி வருவதை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு இன்று (13) புவனேகா அலுவிஹாரே, எல்.டீ.பீ.தெஹிதேனிய, எஸ்.துரைராஜா, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐந்து நீதியரசர்கள் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச தரப்பு பதில் சொலிசிட்டர் ஜெனரல் பர்சான ஜமீல் நிதியமைச்சர் மங்கள சமரவீரா மனுக்களை மட்டுமே பெற்றுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக வேறு எந்தவொரு ஆவணத்தையும் அவர் பெறவில்லை என தெரிவித்தார்.

அதனால் விடயங்களை தெளிவுபடுத்த திகதி ஒன்றை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது மனுவை முன்வைத்த அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஞீவ ஜயவர்தன மற்றும் அங்குவெல்லே ஜினானந்த தேரர் ஆகியோர், இந்த மனுவை அவசர விடயம் என கருதி விரைவாக பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.

அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட இவ்வாறான உத்தேச ஒப்பந்தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்துவதாகவும், இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது ஆயுதப்படைகள் சீருடை மற்றும் ஆயுதங்களுடன் இலங்கைக்குள் பிரவேசிக்க உதவும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு பிரவேசிக்கும் அமெரிக்கப் படைகள் நாட்டினதும், சர்வதேச அளவிலும் எந்தவொரு சட்டத்திற்கும் உட்பட்டவர்கள் அல்லர் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, இதனூடாக தேவையற்ற முறையில் நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்த மாதம் 13 ஆம் திகதி தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு சட்டமா அதிபருக்கு அறிவித்தது.

இந்த மனுக்களை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி பரீசீலனைக்கு எடுத்துக்கொள்வதாகவும், பிரதிவாதிகளுக்கு தேவையான ஆவணங்களை மனுதாரர் தரப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மில்லினியம் சேலஞ்ச் கோப்பரேசன் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கம் அமெரிக்க இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கை, கையகப்படுத்தல் மற்றும் இடை சேவைகளை வழங்கல் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியதாக கடந்த 30 ஆம் திகதி ஊடகங்களின் மூலம் அறிந்துக்கொண்டதாகவும் மனுதார்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்றம் மற்றும் பொதுமக்களின் அனுமதியின்றி கையெழுத்திடப்படவுள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கடுமையாக பாதிக்கும் என்றும் இதனூடாக அரசாங்கம் அரசியலமைப்பை மீறுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதன் மூலம் அரசாங்கம் அரசியலமைப்பை மீறுவதாக அறிவிக்குமாறு மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மரபன, நிதியமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.