
SLIIT இனால் ‘CODEFEST 2018’ நிகழ்வு தொடர்ச்சியான 8 ஆவது ஆண்டாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பு
November 21, 2019 03:55 pm
தகவல் தொழில்நுட்பத்தில் தேசத்தின் முன்னணி பட்டமளிப்பு கற்கைகளை வழங்கும் கல்வியகமான SLIIT, தொடர்ச்சியான 8ஆவது ஆண்டாக தனது வருடாந்த CODEFEST கணனி மென்பொருள் போட்டி நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.
கல்வி அமைச்சுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வு, SLIIT இன் கணனி பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த தலைமுறை மென்பொருள் வடிவமைப்பாளர்கள், புத்தாக்கவியலாளர்கள் மற்றும் இதர தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆர்வலர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. CODEFEST ஊடாக, தேசத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த SLIIT எதிர்பார்ப்பதுடன், அதனூடாக ஆசிய பிராந்தியத்தின் அறிவு மையமாக இலங்கையை திகழச் செய்ய பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கிறது.
இந்த ஆண்டின் SLIIT CODEFEST 2019 நிகழ்வு, கல்வியகத்தின் 20 வருட பூர்த்தியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
CODEFEST 2019 இல் மாணவர்களுக்கான SL EXSTO Awards, Overnight Hackathon, Overnight Designathon, Capture the Flag, AI Innovator, Datathon, Netcom மற்றும் குறுந்திரைப்பட போட்டி போன்றன அடங்கியிருந்தன. பாடசாலை பிரிவில் இடம்பெற்ற போட்டிகளில் மாணவர்களுக்கான ICT புதிர் போட்டி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட coding போட்டிகள், ICT புதிர் போட்டி போன்றன அடங்கியிருந்தன.
இந்த ஆண்டு இடம்பெற்ற போட்டியில் புத்தாக்கத்துக்கான ஈடுபாடு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 950 க்கும் மேற்பட்ட பட்டதாரி பயிலுநர்களைக் கொண்ட 18 பல்கலைக்கழகங்கள், 200 பாடசாலைகளைச் சேர்ந்த 1000 பாடசாலை மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு தொடர்பில் SLIIT இன் உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே கருத்துத் தெரிவிக்கையில், ´இந்த ஆண்டின் SLIIT CODEFEST 2019 என்பது ஒரு போட்டியை விட அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது. பல இளம் திறமையான மாணவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் திறமைகளை வெளிப்படுத்த நாம் களத்தை ஏற்படுத்தியிருந்தோம். எமது ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் இந்த போட்டியினூடாக, வியாபார உலகத்துக்கு ஆளுமை படைத்த மென்பொருள் வடிவமைப்பாளர்களை வழங்கக் கூடியதாகவுள்ளது.´ என்றார்.
இந்த ஆண்டின் போட்டிகள் இரு பிரதான பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பல்கலைக்கழகம் மற்றும் மாணவர். SLIIT மாணவர்களுக்கான உள்ள போட்டியும் mini-hackaton வடிவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.