
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இனப் பிரச்சினைக்கு தீர்வு ?
November 21, 2019 04:36 pm
இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமான நிகழ்வு என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் ஊடகங்களுக்கு இன்று (21) அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இந்த சந்திப்பு தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய வகிபாகத்தை இந்தியா உணர்ந்துள்ளதாகவும்
அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அது தொடர்பில் இலங்கையின் புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கததிற்கு இந்தியா பாரிய அழுத்தத்தை
கொடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் போது இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா
கூடிய கவனம் செலுத்தும் என எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புவதாக கூறியுள்ள அவர் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது அனைத்து தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமை ஏற்பட வழி வகுக்கும் எனவும் 5 கட்சிகள் இணைந்து முன்வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தவும் காரணமாக அமையும் எனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.