
மீண்டும் களம் இறங்கும் சானியா மிர்சா
November 29, 2019 02:11 pm
இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பிரிவில் 6 பட்டங்களை வென்ற சாதனையாளர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்திய அதே வேளையில், உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான பயிற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடக்கும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும் பங்கேற்க இருப்பதாக சானியா நேற்று அறிவித்தார்.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடிய சானியா தனது மறுபிரவேசத்தில் இரட்டையர் ஜோடியாக உக்ரைனின் நாடியா கிசெனோக்கை தேர்வு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் ஜோடி சேருகிறார்.
தான் தற்போது நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்வதாகவும், இந்த போட்டிகளுக்கு முன்பாக மும்பையில் அடுத்த மாதம் நடக்கும் ஐ.டி.எப். போட்டியில் களம் காண திட்டமிட்டுள்ளதாகவும் 33 வயதான சானியா தெரிவித்தார்.