Back to Top

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு தள்ளுபடி

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு தள்ளுபடி

December 9, 2019  06:19 pm

Bookmark and Share
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த வழக்கு இன்று (09) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்ட நேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, செல்வபுரம் கடற்றொழில் சங்கத் தலைவர் பிரன்சிஸ் சபரி ஜெரோம் திலீபன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் பேதுறுப்பிள்ளை பேரின்பநாதன், கோவிற்குடியிருப்பு மீனவர் சங்கத் தலைவர் மர்சலீன் - மிறாண்டா அன்ரனி, செல்வபுரம் கடற்றொழிலாளர் சங்க பொருளாளர் அரியராசா ஜெயராசன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனங்களின் உப தலைவர் வின்சன்டீ போல் அருள்நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவற்றினை அடுத்து கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில் ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் ஆகிய இருதரப்பினரும் இணக்கப்பட்டிற்கு வந்ததற்கமைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

Most Viewed