Back to Top

 ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

July 27, 2020  09:00 am

Bookmark and Share
தமிழகத்தில் மேலும் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 213,723 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 94,695 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 86 சதவீதம் போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு, திருவள்ளூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இதுவரை 23.51 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 213,723 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும், 6,986 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,155 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 501 பேருக்கும், திருவள்ளூரில் 480 பேருக்கும், விருதுநகரில் 385 பேருக்கும், ராணிப்பேட்டையில் 367 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 363 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

73 சதவீதம் போ் குணம்: ஒரு புறம் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம் 73 சதவீதம் போ் அத்தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது சற்று ஆறுதலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5,471 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 156,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளோரின் எண்ணிக்கை 53,703 ஆக உள்ளது.

மேலும் 85 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 85 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 10 பேருக்கு கொரோனாவைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பிறந்து 37 நாள்களே ஆன திருவண்ணாமலையைச் சோ்ந்த ஆண் குழந்தை ஒன்று கொரோனாவால் பலியாகியுள்ளது.

அதேபோன்று, தஞ்சாவூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியும் நோய்த்தொற்றால் உயிரிழந்தாா். இதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,494 ஆக உயா்ந்துள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் 424 போ் கொரோனாவுக்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed