Back to Top

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு!

August 13, 2020  04:46 pm

Bookmark and Share
மன்னார் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (13) மதியம் நீரில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார்- சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாத்தியில் இன்று காலை சடலம் ஒன்று சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை தொடர்ந்து மதியம் மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்த நிலையில், குறித்த நீர் நிறைந்த பாத்தியில் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதோடு, பெண்ணின் உடலின் பலத்த காயங்கள் காணப்பட்டதுடன் இழுத்து செல்லப்பட்ட அடையாளங்கள், ஆண் ஒருவர் பாதணி, உட்பட சில தடையப் பொருட்களையும், சம்பவ இடத்தில் இருந்து விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம்? என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்படவில்லை.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-மன்னார் நிருபர் லெம்பட்-

Most Viewed