Back to Top

MGR அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?

MGR அ.தி.மு.க.வை உருவாக்கி வளர்த்தது எப்படி?

October 17, 2020  07:43 am

Bookmark and Share
எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அ.தி.மு.க. இன்று (17) 49 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய வரலாறு குறித்து அவரிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றிய க.மகாலிங்கம் கூறியதாவது:-

1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் திகதி, தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்த நாள். அன்று காலை 10 மணி அளவில் எம்.ஜி.ஆர். தன் ராமாவரம் தோட்டத்தில் மிகவும் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். அவருடைய அந்த செயல்பாடு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேராக அவர் தன் காரில் ஏறினார். சைகை மூலம் என்னையும் காரில் ஏற சொன்னார். நானும் அவருடன் பயணமானேன்.

கார் நேராக லாயிட்ஸ் சாலையில் உள்ள அன்னை சத்யா திருமண மண்டபத்துக்கு (தற்போதைய அ.தி.மு.க. தலைமை அலுவலகம்) சென்றது. அங்கு அவர் கட்சி பெயரை அறிவித்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த எம்.ஜி.ஆர்., ‘அண்ணாவின் புகழையும், கொள்கைகளையும் கட்டிக்காக்கவும், அவர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது’ என்று கூறினார்.

அண்ணாவின் வளர்ப்பு பிள்ளையாக விளங்கிய எம்.ஜி.ஆர்., அண்ணா தோற்றுவித்த இயக்கமான தி.மு.க.வில் இருந்து வஞ்சக எண்ணம் கொண்ட சில துரோகிகளால் அக்டோபர் 10 ஆம் திகதி நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட நாளில் இருந்து பல தலைவர்களுடன், குறிப்பாக ராஜாஜி, பெரியார் ஆகியோருடன் ஆலோசனையும், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்று இயக்கத்தை தொடங்கினார்.

தன் இதயத்தில் தெய்வமாக இருக்கும் அண்ணாவின் பெயரிலேயே ‘அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்று தன் இயக்கத்துக்கு பெயரினை சூட்டினார். இயக்கத்தின் கொடியிலும் அண்ணாவை நினைவு கூறும் விதமாக அவர் உருவம் பொறித்த கொடியையும் உருவாக்கினார். இவை அனைத்தும் 8 நாட்களில் உருவானது.

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி தன்னுடைய சொந்த கட்டிடத்தையே தலைமை அலுவலகத்துக்காக கொடுத்தார். தொடர்ந்து இயக்கம் நடத்திட தேவையான நிதியையும் அவரே அளித்தார். இதற்காக அவர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து ஆட்சியில் அமரும் வரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். கட்சி வளர்ச்சிக்காக அவர் ஒரு நாளுக்கு 20 மணி நேரத்துக்கு மேலாக உழைத்தவர். ஒரு புறம் திரைப்பட படப்பிடிப்பு. மற்றொருபுறம் அரசியல் பணிகள்.

1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்க மக்கள் அமோக வெற்றியை அளித்தார்கள். தமிழக மக்களின் சார்பாக வெற்றி திருமகள், எம்.ஜி.ஆரை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்தாள்.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது இப்போது ஏற்பட்டதல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலேயே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராகவும், மறைந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம் போன்ற மூத்த தலைவர்கள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். தன் காலத்துக்கு பிறகு இந்த இயக்கம் வீழ்ந்து விடாமல் இருக்கவும், துரோகிகளால் சிதைந்து விடாமல் இருக்கவும் விரும்பினார். அதனை நிறைவேற்றும்விதமாக அவர் வழியே வந்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை தாய் தன் பிள்ளைகளை காப்பது போல் காத்தார்.

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கிய போது அரசியல் எதிரிகள், அவரை பிடிக்காத சிலர் இது நடிகர் கட்சி, இது வெறும் 50 நாட்கள், 100 நாட்கள் தான் ஓடும் என்றெல்லாம் தங்கள் கோபத்தை கேலியும், கிண்டலுமாக வெளிப்படுத்தினர். ஆனால் இந்த வசைகளையெல்லாம் தாண்டி 50 வது ஆண்டினை நோக்கி இளமை துள்ளலோடு, பீடுநடை போடும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நிழல் தரும் ஆலமரமாக, கற்பக விருட்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. சோதனைகள் பல கடந்து, சாதனைகளை பல உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. என்றால், அது மிகையாகது.

மூத்த உறுப்பினர்களான ஓ. பன்னீர்செல்வம் தலைமை பொறுப்பையும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி தலைமையையும் ஏற்றுக் அ.தி.மு.க. பீடுநடை போடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.