Back to Top

டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது பஞ்சாப்!

டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது பஞ்சாப்!

October 21, 2020  09:21 am

Bookmark and Share
ஐபிஎல் போட்டியின் 38 ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் வீழ்த்தியது.

பஞ்சாபுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும்.

டுபாயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

சதம் விளாசிய டெல்லி வீரர் தவன் ஆட்டநாயகன் ஆனார்.

இந்த ஆட்டத்தில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் ரிஷப் பண்ட், ஷிம்ரோன் ஹெட்மயர், டேனியல் சாம்ஸ் ஆகியோர் பிளேயிங் லெவனில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். பஞ்சாபில் கிறிஸ் ஜோர்டானுக்குப் பதிலாக ஜிம்மி நீஷம் இணைந்திருந்தார்.

நாணய சுழற்சியை வென்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா - ஷிகர் தவன் களம் கண்டனர். கடந்த 2 ஆட்டங்களைப் போல இதிலும் சோபிக்காத பிருத்வி ஷா, 1 பவுண்டரியுடன் 7 ரன்களே சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் களம் கண்டார்.

மறுமுனையில் ஷிகர் தவன் பஞ்சாபின் பந்துவீச்சை வாணவேடிக்கைகளாக பறக்கவிடத் தொடங்கினார். இந்நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் 1 சிக்ஸருடன் 14 ஓட்டங்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். முருகன் அஸ்வின் வீசிய 9 ஆவது ஓவரில் அவரடித்த பந்து விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் கைகளில் தஞ்சமானது.

அவரை அடுத்து ரிஷப் பண்ட் ஆட வந்தார். தகுந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காவிட்டாலும் தனது ஆட்டத்தை நேர்த்தியாக தொடர்ந்த தவன் அரைசதம் கடந்தார். மறுபுறம் பண்ட் 1 பவுண்டரி மட்டும் விளாசி 14 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார்.

அவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9 ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட்டார். முகமது ஷமி வீசிய 18 ஆவது ஓவரில் அவர் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்தார். மறுமுனையில் தவன் சதம் கடந்தார்.

ஸ்டாய்னிஸை அடுத்து வந்த ஷிம்ரோன் ஹெட்மயர் 1 சிக்ஸர் உள்பட 10 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தின் கடைசி பந்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். தவன் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 106 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி 2, கிளென் மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் 165 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடிய பஞ்சாப் அணியில், வழக்கமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க வீரர்கள் சொதப்பினர். மாறாக, மிடில் ஆர்டர் பலம் காட்டியது. முதல் விக்கெட்டாக 3 ஆவது ஓவரில் கேப்டன் லோகேஷ் ராகுல் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 15 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த கிறிஸ் கெயில் சற்று அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 29 ஓட்டங்கள் அடித்த அவர், முருகன் அஸ்வின் வீசிய 6 ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் அடித்து நொறுக்கினார். மறுமுனையில் 5 ஓட்டங்களுடன் மயங்க் அகர்வால் ரன் அவுட்டாக, கிளென் மேக்ஸ்வெல் ஆட வந்தார்.

இந்த ஆட்டத்தில் அவர் சற்று நிலைத்து ஆடினார். அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்திய நிகோலஸ்-மேக்ஸ்வெல் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் சேர்த்தது. 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 53 ஓட்டங்கள் சேர்த்த நிகோலஸ், 13 ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடா களம் காண, மறுமுனையில் 3 பவுண்டரிகள் உள்பட 32 ஓட்டங்கள் சேர்த்த மேக்ஸ்வெல்லும் 16 ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சை விளாச முயல, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகளில் அது கேட்சானது. பின்னர் தீபக் ஹூடாவுடன் இணைந்து அணியை வெற்றிக்கு வழிநடத்திய ஜிம்மி நீஷம், கடைசியாக ஒரு சிக்ஸர் விளாசி வெற்றி இலக்கை கடந்தார்.

அவர் 10 ஓட்டங்களுடனும், தீபக் 1 பவுண்டரி உள்பட 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் ரபாடா 2, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Most Viewed