Back to Top

 ஹஃபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறை!

ஹஃபீஸ் சயீதுக்கு 10 ஆண்டுகள் சிறை!

November 20, 2020  10:17 am

Bookmark and Share
ஜமாத்-உத்-தாவா (ஜேயூடி) பயங்கரவாத இயக்கத் தலைவர் ஹஃபீஸ் சயீத் மீதான மேலும் இரு வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மும்பை தாக்குதல் வழக்கில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்குகள் தொடர்பாக அவர் கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள, பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரித்துவரும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், மேலும் இரு வழக்குகளில் ஹஃபீஸ் சயீத் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதித்து லாகூரில் உள்ள பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, பயங்கரவாத தடுப்புத் துறை தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அர்ஷத் உசேன் பூட்டா விசாரித்து, ஹஃபீஸ் சயீத், அவரது இரு நெருங்கிய உதவியாளர்களான ஜாஃபர் இக்பால், யாஹ்யா முஜாஹித் ஆகியோருக்கு தலா பத்தரை ஆண்டுகள் சிறை தண்டனையும், சயீதின் உறவினர் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார் என்றார்.

பயங்கரவாதத் தடுப்புத் துறையால் ஜேயூடி தலைவர்கள் மீது 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 24 வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளன. மற்றவை நிலுவையில் உள்ளன. இதுவரை ஹஃபீஸ் சயீத் மீதான 4 வழக்குகள் முடிந்துள்ளன.

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் (எல்இடி) துணை அமைப்பான ஜமாத்-உத்-தாவாவின் தலைவரான ஹஃபீஸ் சயீதை, சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. கடந்த 2008 டிசம்பரில் அறிவித்தது.