
திரைத்துறைக்கு வரி நிவாரணம்
January 14, 2021 07:16 pm
உள்ளூர் திரைப்படத்துறையை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் வழங்கப்பட்டு பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட வரி நிவாரணத்தை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்கு நேற்று (13) தீர்மானிக்கப்பட்டது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கடந்த 8ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, உள்ளூர் திரைப்பட கலைஞர்களின் கூட்டணியின் தலைவர், பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அதற்கமைய திரைப்பட தயாரிப்பு மற்றும் திரைப்பட காட்சிப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது இறை வரி சலுகை வழங்கப்படும்.
அத்துடன் ஒரு திரைப்படத்தின் தயாரிப்புக்காக செலவிடப்பட்ட பணத்திற்காக வரி விலக்கு மற்றும் திரைப்படத்தை திரையிடப்படுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி நிவாரணம் குறித்தும் இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த வரி நிவாரணம் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஒப்புதலுக்கமைய செயற்படுத்தப்படும். அதற்கேற்ப உள்ளூர் திரைப்பட துறையினர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட துறையுடன் தொடர்புடைய அனைத்து வல்லுனர்களுக்கும் திரைப்பட கூட்டுத்தாபனத்தின் ஊடாக கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் இந்த வரி சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும்.