Back to Top

ஐபிஎல் 2021 - புதிய விதிகள் - முக்கிய தகவல்கள்!

ஐபிஎல் 2021 - புதிய விதிகள் - முக்கிய தகவல்கள்!

April 5, 2021  11:14 am

Bookmark and Share
14 ஆவது இந்தியன் ப்ரிமீரியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், வரும் 9 ஆம் திகதி முதல் தொடங்குகின்றன. கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், பார்வையாளர்கள் இல்லாமல் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

அது மட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சில புதிய மாற்றங்களையும் காண முடியும், அவற்றை இங்கே பார்க்கலாம்.

1. ஐபிஎல்லுக்கு மீண்டு(ம்) வரும் புஜாரா

செதேஷ்வர் புஜாரா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் ஐபிஎல்லை பொறுத்தவரை இன்னும் நிலைபெறவில்லை.

நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்தும் புஜாரா, சிக்சர்களும், பவுண்டரிகள் மட்டுமே பெரிதும் தேவைப்படும் ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை இதுவரை நிரூபிக்கவில்லை. இந்த நிலையில், ஐபிஎல்லில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை களமிறங்குகிறார் அவர்.

புஜாரா இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார்.

இதுவரை 30 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 390 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு அரைசதமும் அடக்கம். இந்த முறை புஜாரா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2. அறிமுகமாகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக ஐபிஎல்லில் இந்த ஆண்டு களமிறங்குகிறார்.

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது அவர் இருபது லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது, மும்பை அணியின் வலைப்பந்துவீச்சாளராக இருந்த அர்ஜுன், பலதரப்பட்ட கிரிக்கெட் தொடர்களில் மும்பை அணிக்காகவும், இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் விளையாடி உள்ளார்.

இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜுன், பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறார். சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக அறிமுகமான இவர், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3. புதிய கேப்டன்கள்

இந்த ஆண்டு தொடரில் இரண்டு அணிகள் புதிய கேப்டன்களை வரவேற்க உள்ளன.

கடந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையில் சோபிக்க தவறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

26 வயதான சஞ்சு சாம்சன், இதுவரை 107 போட்டிகளில் விளையாடி 2,584 ஓட்டங்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 133.74 ஆக உள்ளது. 2008 ஆம் ஆண்டு முதலாவது ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி, சஞ்சு சாம்சன் தலைமையில் மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

ஆனால், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை சமாளித்து அணியை வழிநடத்துவது அவருக்கு சவாலானதாக இருக்கும்.

ஆனால், மற்றொருபுறம் வெறும் 23 வயதே ஆன ரிஷிப் பந்த் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வழிநடத்த தயாராகி விட்டார்.

தோள் பட்டை காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல்லில் பங்கேற்க முடியாது என்பதால் அவருக்கு பதிலாக துணை தலைவர் ரிஷப் பந்திற்கு அணி நிர்வாகம் தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளது.

ரிஷாப் பந்த் பேட்டிங் மட்டுமின்றி கீப்பிங்கிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு முன், உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லிக்கு தலைவராக ரிஷாப் பந்த் செயல்பட்டுள்ளார்.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கிண்ணத்தை வெல்லாத டெல்லி அணி, கடந்த முறை இறுதியாட்டம் வரை சென்றிருந்தது.

4. பொதுவான மைதானத்தில் நடக்கும் போட்டிகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பெங்களூரு, அகமதாபாத், மும்பை, சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளன.

முழு தொடரின்போதும் ஒரு அணி 3 முறை மட்டுமே மற்றொரு மைதானத்தில் விளையாடுவதற்கு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

ஐ.பி.எல் இன் அடிப்படை விதிகளின்படி, அனைத்து அணிகளும் தங்கள் சொந்த மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெறுகின்றன. அதே நேரத்தில் 7 போட்டிகள் மற்ற அணிகளின் மைதானத்தில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அணிகள் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இருப்பினும், கொரோனா காரணமாக, இந்த முறை அனைத்து அணிகளும் நடுநிலை இடங்களில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கும்.

இது தவிர, அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை.

5. மும்பையின் ஆதிக்கம்

உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணி மிகவும் வலுவானதாக கருதப்படுகிறது. எனவே, மும்பையைச் சேர்ந்த பல வீரர்கள் ஐபிஎல்லில் தங்கள் அதிரடியை காட்டுவார்கள் எனலாம்.

மும்பை அணிக்காக விளையாடிய ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ், தவால் குல்கர்னி, ஆதித்யா தாரே மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையில், மும்பை அணி 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது.

மகாராஷ்டிராவுக்காக விளையாடும் ரிதுராஜ் கெய்க்வாட், சென்னை சூப்பர் கிங்ஸின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார். இதுபோன்ற பல்வேறு அணிகளிலும் மகாராஷ்டிர மாநில அணிக்காக விளையாடும் வீரர்கள் இந்த ஆண்டும் களமிறங்க உள்ளனர்.

6. கிங்ஸ் லெவன் பஞ்சாப் இனி பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல்லில் 13 தொடர்கள் நடந்து முடிந்துவிட்டாலும், இதுவரை ஒருமுறை கூட பஞ்சாப் அணியால் கிண்ணத்தை வெல்ல முடியவில்லை.

இதுவரை அணியின் வீரர்களையும், தலைவரையும் மாற்றி வந்த நிர்வாகம் இந்த முறை அணியின் பெயரையே மாற்றிவிட்டது.

ஆம், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியாவுக்கு சொந்தமான பஞ்சாப் அணியின் பெயர் இனி "பஞ்சாப் கிங்ஸ்" என்ற அழைக்கப்படும்.

7. நடுவரின் முடிவை பரிசீலனை செய்வதில் மாற்றம்

மூன்றாவது நடுவர் ஒரு முடிவை எடுக்கும்போதெல்லாம், களத்திலுள்ள நடுவரின் முடிவுக்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதே கிரிக்கெட்டில் வழக்கமானதாக இருந்து வருகிறது.

ஆனால் இனி அது ஐ.பி.எல்லில் நடக்காது. ஏனெனில் இந்த ஆண்டு தொடரில், ஆடுகளத்திலுள்ள நடுவரின் சமிக்ஞைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், மூன்றாவது நடுவர் தனிப்பட்ட முறையில் முடிவை எடுக்க முடியும்.

ஆடுகளத்திலுள்ள நடுவர் அளிக்கும் குறிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மூன்றாம் நடுவர் பரிசீலனை செய்யும்போது, அது சில நேரங்களில் முடிவில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

8. இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டியது கட்டாயம்

ஐபிஎல் போட்டிகள் தாமதமாக முடிவதாக தொடர்ச்சியாக புகார் உள்ளது.

இந்த புகாரை சமாளிக்க, இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இருந்து ஒரு புதிய விதி அமலுக்கு வருகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் 20 ஓவர்களை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும். இந்த விதியை மீறினால் அணியின் தலைவர் உட்பட முழு அணியினருக்கும் அபராதம் விதிக்கப்படலாம்.

ஒரு அணி இந்த விதிமுறையை இரண்டு முறைக்கு மேல் மீறினால், அதற்கு கடுமையான தண்டனை கிடைக்கக்கூடும். மேலும் சில போட்டிகளுக்கு அணியின் குறிப்பிட்ட தலைவர் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.

9. ஒரு மணி நேரத்திற்குள் சூப்பர் ஓவர்

ஒரு போட்டி சமநிலையில் இருந்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் போட்டியை சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்குள் போட்டி முடிவுக்கு வராவிட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.

10. ´நோ பால்´ முடிவை மூன்றாம் நடுவரும் எடுப்பார்

களத்திலுள்ள நடுவர்கள் நோ பால் குறித்து எடுக்கும் முடிவு தவறாக இருக்கும்பட்சத்தில் அதை மாற்றும் அதிகாரம் இனி மூன்றாம் நடுவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஷார்ட் ரன், அதாவது வீரர்கள் ஓட்டங்கள் எடுக்க ஓடும்போது கிரீஸை சரிவர தொடாமல் ஓடினால் அதை கவனிக்கும் பணியை இனி களத்திலுள்ள நடுவருக்கு பதில் மூன்றாம் நடுவர் மேற்கொள்வார்.

11. இந்த ஆண்டு விளையாடாத வீரர்கள்

அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் மற்றும் இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோர் கடந்த சீசனில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், மலிகா மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வந்தனர்.

இந்த இருவரைத் தவிர, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஜோஸ் பிலிப், டேல் ஸ்டெய்ன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பல்வேறு காரணங்களால் இந்த சீசனில் விளையாட மாட்டார்கள்.