Back to Top

 நாட்டின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

நாட்டின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

April 8, 2021  07:07 am

Bookmark and Share
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (07) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்கதேல வரவேற்றார்.

தலதா மாளிகை வளாகத்தில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க சங்கைக்குரிய வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்த ஜனாதிபதி, தேரரின் நலம் விசாரித்ததுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அஸ்கிரி மகா விகாரையின் காரக சங்க சபிக்க பதுலு முத்தியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய முருத்தெனியே தம்மரத்தன தேரரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார்.

புராதன காலத்தில் காணப்பட்ட பசுமையான கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிராமம் கிராமமாக விஜயம் செய்யும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தேரர்கள் பாராட்டினர்.

கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாதென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயத்தின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவேயாகும் என்று குறிப்பிட்டார்.

இறக்குமதியை கட்டுப்படுத்தி நாட்டில் பயிரிடக் கூடிய அனைத்து பயிர் வகைகளையும் பயிரிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது வெளிநாட்டு விவசாயிகளுக்கு சென்ற நிதியை எமது விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே ஆகும்.

பயரிடக்கூடிய அனைத்து நிலங்களையும் விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு புதிய தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தி விளைச்சளை அதிகரிப்பதற்கும் இளைஞர் சமுதாயத்தை இத்துறையில் ஊக்கப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொவிட் சவாலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்தமைக்கான காரணம் அரசாங்கம் முன்னெடுத்த சரியான வேலைத்திட்டங்களாகும். இன்று அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளதோடு, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்நாட்டின் சுபீட்சத்தின் அடையாளமாகக் காணப்படும் தேயிலை கைத்தொழிலை வீழ்ச்சியடைய இடமளிக்காது பலமுடன் முன்னோக்கி செல்வதற்காக தேயிலை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இத்துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிரச்சினைகளை தீர்த்து நாட்டின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று மகா சங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.

தலதா மாளிகையை தரிசிக்க வருகை தந்திருந்த மக்களிடம் சுக நலன்களை விசாரித்தறிந்த ஜனாதிபதி, அவர்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, மல்வத்து மகா விகாரைக்கு சென்று, மல்வத்து மகாநாயக்க சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்க சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமலதம்ம தேரரை சந்தித்த ஜனாதிபதி, தேரரின் நலனை விசாரித்து அறிந்து கொண்டார். அனுநாயக்க தேரர் தங்கியுள்ள விகாரை இலங்கை கடற் படையினரால் புனர்நிர்மாணம் செய்யப்படுவதையும் அவதானித்த ஜனாதிபதி, உடனடியாக அதனை முழுமைப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.

கெடம்பே ராஜோப்ப வனாராமயவிற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விகாராதிபதி சங்கைக்குரிய கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரரையும் சந்தித்ததோடு, பிரித் பாராயணத்தில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

தமது 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதிய “யத்திவர ஹதவத விநிவித துட்டிமி” நூல் நாயக்க தேரரால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. தேரர் அவர்களின் தேசிய, மத, சமூக சேவைகளை பற்றி பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல், விஞ்ஞான பிரிவின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.ஏ.டப்ளியு.ரணசிங்கவினால் இந்நூல் எழுதப்பட்டது.

ஜனாதிபதி அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க சாஸ்திரபதி பண்டித சங்கைக்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதசி தேரரை சந்தித்தபோது, எவ்வகையான தடைகள் வந்தாலும் எதிர்கால வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு பலமும் தைரியமும் பெற வேண்டுமென தேரர் ஜனாதிபதியை ஆசிர்வதித்தார்.

அதனைத் தொடர்ந்து அஸ்கிரி கெடிகே ரஜமகா விகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், விகாராதிபதி சாஸ்திரபதி பண்டித சங்கைக்குரிய வெண்டருவே உபாலி அனுநாயக்க தேரரை சந்தித்து நலன் விசாரித்ததுடன், சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ரங்கிரி தம்புலு விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கொடகம மங்கள தேரரும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டார்.

மல்வத்து மகா விகாரையில் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்தசிறி தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், பல்வேறு மத, சமூக விடயங்களை கலந்தாலோசித்தார்.