Back to Top

ஸ்டெம் செல் ஆய்வுகூடத்தை மெருகேற்றியுள்ள ஆசிரி வைத்தியசாலை

ஸ்டெம் செல் ஆய்வுகூடத்தை மெருகேற்றியுள்ள ஆசிரி வைத்தியசாலை

April 8, 2021  12:04 pm

Bookmark and Share
ஆசிரி வைத்தியசாலை தனது மேம்படுத்தப்பட்ட ஸ்டெம் செலல் ஆய்வுகூடத்தின் ஊடாக தனியார் சுகாதாரத் துறையில் என்பு மச்சை மாற்றீட்டு சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களுக்கு குறிப்பாக குழந்தைகளின் வாழ்க்கையை காப்பாற்ற முடியும் என்ற புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் தனியார் துறையில் முதலாவது என்பு மச்சை மாற்றீட்டு நிலையம் ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் முன்னோடித் திட்டமாக 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுடன் நோயாளர்களின் இக்கட்டான சூழ்நிலையிலும் இதன் ஊடாக சிகிச்சை தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தின் ஊடாக வெளிநாட்டு நோயாளர்கள் உள்ளடங்கலாக 98% வெற்றியுடன் 60 ற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக வழங்கிவரும் தரமான சிகிச்சைக்காக ஆசிரி என்பு மச்சை மாற்றீட்டுப் பிரிவுக்கு சர்வதேச இணை ஆணையகம் (JCI) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

லியூகேமியா லிம்ஃபோமா மைலோமா போன்ற இரத்தப் புற்று நோய்களுக்கும்ரூபவ் தலசீமியா மற்றும் அப்லாஸ்டிக் அனேமியா போன்ற ஏனைய இரத்தக்கோளாறுகளுக்கும் என்பு மச்சை மாற்றீட்டு நிலையம் சிகிச்சைகளை வழங்குகிறது. இந்நிலையமானது நோயாளியின் குடும்பத்தில் உள்ள மற்றொரு ஆரோக்கியமான நபரிடமிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்று அலோஜெனிக் என்பு மச்சை மாற்றீட்டு சிகிச்சையையும் மேற்கொள்கிறது.

எனினும் குடும்ப உறுப்பினர்களின் மரபணுக்கள் பொருந்தாத சந்தர்ப்பத்தில் சர்வதேச பதிவேடுகளிலிருந்து என்பு மச்சைகள் கிடைப்பதை ஆசிரி வைத்தியசாலை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவின் டத்ரி பதிவு மற்றும் ஏனைய நாடுகளான அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மன் போன்ற பதிவு செய்யப்பட்ட நாடுகளிலுள்ள நன்கொடையாளர்களிடமிருந்து நோயாளர்களுக்காக அவற்றைப் பெற்றுக்கொள்கிறது.

தொற்றுநோய் முழு நாட்டையும் பாதித்திருக்கும் சூழ்நிலையில் விமானங்கள் இரத்துச் செய்யப்படுகின்றமை மற்றும் ஏனைய காலதாமதங்களால் நோயாளர்களுக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. விமானங்கள் மற்றும் கூரியர் சேவைகளுக்கான மட்டுப்பாடுகள் என்பு மச்சை மாற்று நோயாளர்களின் சிகிச்சை செயற்பாடுகளை அச்சுறுத்தலாக்கின.

அத்துடன் நன்கொடையாளர்கள் கொரொனா வைரஸ் தொற்றுக்களுக்கு உள்ளாகியமை தனிமைப்படுத்தல்கள் அல்லது முடக்கங்களுக்கு முகங்கொடுத்தமை அதேநேரம் மாற்று சிசிச்சைக்காக காத்திருக்கும் நோயாளி ஆயத்த விதிமுறைக்கு உட்படுத்தப்படுகிறார் அங்கு அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பு பூச்சியமாகக் குறைக்கப்படுகிறது இது கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்ற நிலைமைகளாலும் சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதனால் வேறு நாட்களில் பயன்படுத்துவதற்காக ஸ்டெம் செல்களைப் பதப்படுத்த அல்லது களஞ்சியப்படுத்த வேண்டி ஏற்பட்டது. இது தற்போதை சூழலுக்குத் தேவையான அவசர விடயமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு இலங்கையில் தனியார் சுகாதாரத்துறையில் காணப்படும் ஒரேயொரு ஸ்டெம் செல் ஆய்வுகூடத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தது.

ஆசிரி வைத்தியசாலையின் என்பு மச்சை மாற்றீடு மத்திய நிலையத்தின் ஆலோசகர் வைத்தியர் லலிந்திர குணரத்ன குறிப்பிடுகையில் ´குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஸ்டெம் செல்களை முன்பே பெற்றுக் கொண்டு அவற்றை சேமித்து வைப்பதே கொவிட் சூழலில் சிறந்தது என்பது அலோஜெனிக் மாற்று சிகிச்சைக்கான சர்வதேச பரிந்துரையாகும். இப்போது மேம்படுத்தப்பட்ட வசதியைக் கொண்டிருப்பதால் நோயாளியை நாங்கள் பாதுகாப்பாக தயார் செய்து நிலைநிறுத்த முடிகிறது எனவே தேவையான நேரத்தில் நன்கொடையாளர் கிடைக்காவிட்டாலும் ஸ்டெம் செல்கள் சேமிப்பில் உள்ளன. ஒரு வருடத்துக்கு குருத்தணுக்களைச் சேமிக்கக் கூடிய வசதிகளை நாம் கொண்டுள்ளோம்´ என்றார்.

இந்த மேம்படுத்தப்பட்ட வசதியானது மாற்றுச்சிகிச்சை மருத்துவ ஆலோசகர் மற்றும் இந்த துறையில் சிறப்பாக பயிற்சி பெற்ற ஒரு விஞ்ஞானி மற்றும் ஹீமாடோபாய்டிக் ஸ்டெம் செல்களை பதப்படுத்தக்கூடிய அனுபவம் மிக்க நிபுணர்கள் குழுவைக் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது.