Back to Top

நிர்வாண ஒலிம்பிக் போட்டிகள்!

நிர்வாண ஒலிம்பிக் போட்டிகள்!

July 29, 2021  08:55 am

Bookmark and Share
கி.மு 720ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 185 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்குபெற்ற மெகாராவைச் சேர்ந்த ஆர்சிப்பஸ்ஸின் கீழாடை திடீரென்று கழன்று விழுந்து விட்டது. அவமானத்தால் ஓடுவதைப் பாதியில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து ஓடிய ஆர்சிப்பஸ் போட்டியில் வெற்றி பெற்றார். அவரது புகழ் நிலைத்தது என்கிறது பண்டைய கிரேக்க செவிவழிச் செய்தி ஒன்று.

அந்த நிகழ்வுக்குப் பிறகு கிரேக்க கடவுளான சூஸுக்கு ஒரு சமர்ப்பணமாகப் பார்க்கப்படும் நிர்வாண ஒலிம்பிக், கிரேக்கம் முழுக்கப் பிரபலமானது. உடல் முழுக்க ஆலிவ் எண்ணெயைப் பூசிக்கொண்டு வீரர்கள் பங்கேற்பார்கள்.

அயோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் சாரா பாண்ட் பேசும்போது, "ஆர்ச்சிபஸ் ஒரு கதாநாயகனாகக் கொண்டாடப்பட்டார். பிறகு அவரது நிர்வாணமும் பேசப்பட்டது. கிரேக்கத்தன்மை, குடிமகனாக இருப்பது போன்றவற்றை அடையாளப்படுத்தும் விதமாகவே கிரேக்கர்கள் நிர்வாணத்தை அணுகினார்கள்" என்கிறார்.

1896ல் நவீன ஒலிம்பிக்குக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. அதற்குள் கலாசாரம் மாறிவிட்டது. கிரேக்கத்தின் நிர்வாண ஒலிம்பிக்கை திரும்பக் கொண்டுவருவது பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

நவீன விளையாட்டுப் போட்டிகளில் உடை ஒரு முக்கியமான அங்கமாகப் பார்க்கப்படுகிறது - காலணிகள் கால்களை நிலத்தில் அழுத்த உதவுகின்றன, ஓடுபவர்களின் கால்களுக்கு ஒரு துள்ளலை வழங்குகின்றன. நீச்சல் உடைகள் நீரைக் கிழித்து இலகுவாக முன்னேற உதவுகின்றன. உடலோடு ஒட்டிய ஆடைகள் காற்றின் பின் இழு விசையைக் குறைக்கின்றன.

கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கிடையே இப்போது டோக்யோவில் நடந்துவரும் கோடைகால ஒலிம்பிக் பல வகைகளில் வினோதமானது. பண்டைய கிரேக்க முறைப்படி நிர்வாண ஒலிம்பிக் நடந்தால் எப்படி இருக்கும்?

யாரும் இப்படி செய்யவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள் - ஆனால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதன் மூலம் விளையாட்டுத் திறன், மரபுகள், பாலின ஏற்றத்தாழ்வு போன்ற பலவற்றை அலச முடியும்.

உண்மையாகவே நிர்வாண உடலோடு போட்டியில் கலந்துகொள்வது என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு தர்ம சங்கடமாகவே இருக்கும். உடலை ஒட்டிய உடைகளைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட அரை நிர்வாணமாகத்தான் இருக்கிறார்கள் என்று தோன்றினாலும், பெண்களின் மார்பகங்களையும் ஆண்களின் பாலுறுப்பையும் ஒரு நிலையில் வைக்க அந்த உடைகள் உதவுகின்றன.

வட கரோலினா பல்கலைக்கழகத்தின் துணி பாதுகாப்பு மற்றும் சௌகரியத் துறையின் இயக்குநர் ஷான் டீட்டன் பேசும்போது, "இது ஓரளவாவது சௌகரியமாக இருக்கும்" என்கிறார்.

இன்னொரு புறம் பார்த்தால், உடை என்பது செயல்திறனை அதிகரிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மெல்பர்னின் ஆர்.எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செயல்சார் பொருட்கள் மற்றும் மனிதனை மையப்படுத்திய பொறியியல் துறையின் பேராசிரியர் ஓல்கா ட்ரோய்நிகாவ் பேசும்போது, "இது அந்தந்த விளையாட்டு வீரர்களின் உடலமைப்பையும் உடையையும் விளையாட்டையும் பொருத்தது. உடைகள் முக்கியமாக இரண்டு விஷயங்களை செய்கின்றன. உடலை சீரான அமைப்போடு வைக்கின்றன, ஆகவே ஒரு செயலைச் செய்வதற்கு தசைகளால் முழு ஆற்றலைத் தர முடியும்.

குறிப்பாக இது பளுதூக்குதலில் மிகவும் முக்கியமானது. உடலை ஒட்டிய உடைகள் இல்லாவிட்டால் செயல்திறன் பாதிக்கப்படும். காற்று அல்லது நீரைக் கிழித்துக்கொண்டு முன்னேறும்போது ஒரு பின்னிழுவிசை இருக்கும். வழுவழுப்பான உடைகள் அதைக் குறைக்கும்.

உதாரணமாக, சைக்கிளிங் வீரர்கள் கால்களில் உள்ள முடிகளை நீக்குவதோடு வழுவழுப்பான உடைகளை அணிந்துகொள்வார்கள். அப்போது காற்றுக்கு எதிரான உராய்வு குறையும். ஆங்காங்கே சரியான இடங்களில் உள்ள சொரசொரப்பான உடைப் பகுதிகள் அவர்களுக்குப் பின்னால் ஒரு விசையை உருவாக்கி முன்னேற உதவும்," என்கிறார்.

உடையால் வீரர்களின் செயல்திறன் அதிகரிப்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் நீச்சல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஆடை வடிவமைப்புதான். "விளையாட்டு வீரர்களின் செயல்திறனுக்கிடையே மட்டுமில்லாமல், ஆடை பொறியியலாளர்களுக்கு நடுவே நடக்கும் போட்டியாகவும் அது மாறியது," என்கிறார் ட்ரோய்நிகாவ்.

2008ல் பெய்ஜிங் ஒலிம்பிக்கின்போது நீச்சல் போட்டிகளில் 25 உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. அவற்றுள் 23 சாதனைகளின்போது வீரர்கள் எல்.இசட்.ஆர் ரேசர் என்ற பாலியூரிதேன் உடையை அணிந்திருந்தார்கள்.

இந்த உடையை வடிவமைப்பதில் உதவிய நாசா விஞ்ஞானிகள், இந்த அதிநவீன உடையால் தோல் உராய்வு 24% குறைகிறது என்றும், வீரரின் உடலே சுருங்கி அழுத்தப்படுவதால் பின்னிழுவிசை குறைகிறது என்றும் தெரிவித்தார்கள். 2010ல் சர்வதேச நீச்சல் மேலாண்மைக் கூட்டமைப்பான ஃபினா, இதுபோன்ற உடைகளை வீரர்கள் அணிந்துகொள்வது அவர்களுக்கு அளவுக்கதிகமான ஒரு பயனைத் தருகிறது என்று தெரிவித்தது. வேகத்தை அதிகரித்து, மிதக்கும் சக்தியையும் செயல்திறனையும் அதிகரிக்கும் உடைகளை அணிந்துகொண்டு நீச்சல் போட்டிகளில் பங்கெடுப்பதற்கு ஃபினா தடை விதித்துள்ளது.

மார்பகங்களாலும் பிறப்புறுப்புகளாலும் பின்னிழுவிசை அதிகமாகும் என்பதைத் தவிர, நிர்வாணமாகப் பங்கெடுப்பதால் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பெரிதாக மாறிவிடாது. மற்ற விளையாட்டுப் போட்டிகளில் உடையால் செயல்திறன் அதிகரிக்குமா என்பதில் விவாதம் நிலவுகிறது.

"சிலர் இதனால் செயல்திறன் அதிகரிக்கிறது என்கிறார்கள், ஆனால் அப்படி எதுவும் இல்லை" என்கிறார் ட்ராய்நிக்காவ்.

அழுத்துகிற உடைகள் உடலில் ரத்த ஓட்டத்தை மாற்றியமைத்து ஆக்சிஜனை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது தொடர்பான ஆராய்ச்சியில் பாதிக்குப் பாதி விஞ்ஞானிகள் மாறுபட்ட முடிவுகளையே தருகிறார்கள். "சில ஆய்வுகள் இருக்கின்றன என்றாலும் அவற்றின் முடிவுகள் தெளிவாக இல்லை" என்கிறார் ட்ராய்நிக்காவ்.

ஷூக்களின் கதை முற்றிலும் வேறுபட்டது. அவை கால்களைப் பாதுகாப்பதோடு செயல்திறனையும் அதிகப்படுத்துகின்றன. சரியான காலணிகள் பாதங்களின் வளைவு, குதிகால் ஆகியவற்றைப் பாதுகாப்பது, கால் மூட்டுக்கான பாதுகாப்பு தருவது ஆகியவற்றை செய்கின்றன. ஓடும்போதும் குதிக்கும்போது திடீரென்று திரும்பும்போதும் அவை உதவுகின்றன. கால்களில் உள்ள எலும்புகள், தசைநார்கள், தசைகள் ஆகியவற்றின்மீதான பாதிப்பையும் குறைக்கின்றன.

வட கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்ஸன் டெக்ஸ்டைல் கல்லூரியில் உள்ள பொறியாளர் பமீலா மெக்காலே பேசும்போது, "பாதங்கள்தான் உடலைத் தாங்கிப் பிடிக்கின்றன. உடலுக்குப் பாதுகாப்பு வேண்டுமானால் பாதங்களைப் பார்த்துக்கொள்ளவேண்டும்" என்கிறார்.

சில விளையாட்டுகளில் பாதுகாப்புக்காக மேம்படுத்தப்பட்ட தனித்துவமான காலணிகளும் தேவைப்படுகின்றன. படகுப் போட்டியில் பங்கெடுக்கும் வீரர்களுக்கு ஒரு படகின் பக்கவாட்டிலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும்போது வழுக்காமல் இருக்கிற, அவர்களை நிலையாக நிற்கவைக்கிற காலணிகள் தேவைப்படும். இவை செயல்திறனை அதிகரிப்பதோடு விபத்துகளையும் தவிர்க்கின்றன.

"நிர்வாண ஒலிம்பிக் நடத்துவதாக இருந்தால் வீரர்கள் குறைந்தபட்சம் காலணிகளையாவது அணிந்துகொள்ளட்டும்" என்கிறார் மெக்காலே.

நிர்வாண ஒலிம்பிக் நடத்தப்பட்டால் யார் பங்கு பெறுவார்கள் என்பதிலும் மாற்றம் ஏற்படும். கட்டாய நிர்வாணம் அறிவிக்கப்பட்டால் பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போட்டியிலிருந்து விலகுவார்கள். பழமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் தங்கள் விளையாட்டு வீரர்களை அனுப்ப மறுக்கலாம். "கண்ணியத்தை முக்கியமானதாகப் பார்க்கும் மரபுகளில் இது பிரச்சனையாக இருக்கும்" என்கிறார் சிட்னி பல்கலைக்கழகத்தின் பாலினத்துறை கௌரவ இணைப் பேராசிரியர் ரூத் பார்கன். "நிர்வாணம்: ஒரு மரபுசார் உடற்கூறியல்" என்ற புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.

18 வயதுக்குக் கீழ் உள்ள விளையாட்டு வீரர்களும் நிர்வாணமாகத்தான் பங்கெடுக்கவேண்டும் என்ற விதி இருந்தால் அது சட்டரீதியாகவும் அறம் தொடர்பாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். பண்டைய கிரேக்க ஒலிம்பிக்கின்போது 12 வயது சிறுவர்கள்கூட நிர்வாணமாகப் பங்கேற்றார்கள் என்றாலும் அது மதரீதியான நிகழ்வாக இருந்தது என்பதால் அப்போது அது பாலியல் ரீதியாகப் பார்க்கப்படவில்லை என்கிறார் பாண்ட்.

"இப்போது நிலைமை அப்படி இல்லை. பண்டைய கிரேக்கத்தில் ஒலிம்பிக்கில் நிர்வாணம் என்பதற்கு வேறு பொருள் இருந்தது. இப்போது அது பாலியல் ரீதியாகப் பார்க்கப்படும், பல பாலியல் சுரண்டல்களுக்கு வழிவகுக்கும்" என்கிறார்.

பண்டைய கிரேக்கத்தில் ஒரே மாதிரியான பின்னணியைச் சேர்ந்த மேட்டுக்குடி ஆண்கள் மட்டுமே ஒலிம்பிக் பார்வையாளர்களாக இருந்தார்கள். சில சமயம் திருமணமாகாத பெண்களும் பார்வையாளர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றோ, ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகின்றன.

பழமை நிறைந்த நாடுகளில் நிர்வாண ஒலிம்பிக்கை ஒளிபரப்புவதற்குத் தடை வரலாம். ஆனால் மற்ற இடங்களில் ஊடகங்கள் பரபரப்போடு இதை அணுகலாம் என்கிறார் பார்க்கன். "பார்வையாளர்களும் இதை ஒரே மாதிரியாகப் பார்க்கமாட்டார்கள், சிலர் இதை அழகியல் சார்ந்து அணுகுவார்கள், சிலருக்கு இது அருவெறுப்பாக இருக்கும்" என்கிறார் பார்க்கன்.

சமூக ஊடகங்களில் இது தீவிரமாகப் பரவும். விளையாட்டு வீரர்களின் உடல் துல்லியமாக அலசி ஆராயப்படும், இது செயல்திறனை பாதிக்கலாம். இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத வீரர்கள் தங்கள் மீது வெளிச்சம் விழுவதை ரசிக்கலாம். "தங்கள் நேர்த்தியான உடலை அவர்கள் தைரியமாக வெளிக்காட்டிக்கொள்வார்கள்.

ஆனால் மிகவும் தன்னம்பிக்கை உடைய வீரர்கள்கூட இந்த கவனிப்பு வரும்போது சிரமப்படுவார்கள். ஊடகங்களும் பொதுக்கலாசாரமும் இதை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது அவர்கள் கையில் இல்லையே. தவிர, ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களும் திருநங்கைகளும் தீவிரமாக கவனிக்கப்படுவார்கள்.

அதைத்தான் வரலாறும் சொல்கிறது. 1999 பெண்கள் உலகக் கோப்பையில் முக்கியமான ஒரு கோலை அடித்துவிட்டு ப்ராண்டி செஸ்டன் தனது சட்டையைக் கழற்றினார். ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்த அவரது புகைப்படம் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டது. ஆண் வீரர்கள் அடிக்கடி சட்டையில்லாமல் இருக்கிறார்கள், அது கண்டுகொள்ளப்பவதில்லை" என்று விளக்குகிறார் பார்கன்.

"அமெரிக்கப் பொதுமக்கள் இதைப் பாலியல் ரீதியாக அணுகினாலும் முழு நிர்வாணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்துப் பார்க்கிறேன்" என்கிறார் பாண்ட்.

உடை அணியாமல் இருப்பதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்களையும் செயல்திறன் இழப்புகளையும் விட உளவியல் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். "உங்கள் உடலின் மிக அந்தரங்கமான உறுப்புகளின்மீது பல கோடிக் குரல்கள் விமர்சனம் வைக்கும், அதை மீறி விளையாடவேண்டும் என்கிற அழுத்தத்தைக் கற்பனை செய்து பாருங்கள்" என்கிறார் பாண்ட்.

ஒருவேளை ஒலிம்பிக்கில் நிர்வாணம் கட்டாயமாக்கப்பட்டால், கொஞ்ச காலத்தில் அதை வெற்றியின், கொண்டாட்டத்தின் குறியீடாகப் பார்க்கும் பண்டைய கிரேக்க மனநிலை மீண்டும் வரலாம். ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது என்கிறார் பார்க்கன்.

அது நடக்கும்வரை, நிர்வாணத்தின் மீதான கலாசார மற்றும் சமூக அழுத்தங்களைக் கடந்து வருவதற்கு விளையாட்டு வீரர்கள் அதிகமான ஆற்றலை செலவிடவேண்டியிருக்கும். அது விளையாட்டை பாதிக்கும். விளையாட்டுத் திறன் இருக்கிறதோ இல்லையோ, பண்டைய கிரேக்க மனநிலை கொண்ட வீரர்கள் மட்டுமே முதல் நிர்வாண ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவார்கள்.

Most Viewed