Back to Top

 கொரோனா பேரழிவில் இருந்து  மீளவில்லை!

கொரோனா பேரழிவில் இருந்து மீளவில்லை!

August 15, 2021  06:39 am

Bookmark and Share
கொரோனா பேரழிவு விளைவில் இருந்து இன்னும் இந்தியா மீளவில்லை என்று இந்திய சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) ஆற்றிய உரையின்போது நினைவூட்டினார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்தியாவில் மரபுகளின்படி குடியரசு தின விழா கொண்டாடப்படும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவரும் சுதந்திர தினத்தின்போது டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமரும் தேசிய மூவர்ண கொடி ஏற்றி வைப்பது வழக்கம். இதில், சுதந்திர தினத்துக்கு முந்தைய தினம் நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் உரையாற்றுவார்.

இதன்படி சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முந்தைய நாளான இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் இருந்து 10 முக்கிய அம்சங்களை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம்.

1. டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 121 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் நமது நாட்டின் வீர மகள்கள் ஆடுகளத்தில் பல வேறுபாடுகளை எதிர்கொண்டு உலக அரங்கில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பை, இந்தியாவின் எதிர்கால வெற்றி பிரகாசமாக இருப்பதாக பார்க்கிறேன். அத்தகைய ஈடுபாடு மிக்க மகள்களுக்கு வாய்ப்புகளை வழங்குமாறு ஒவ்வொரு பெற்றோரையும் நான் வலியுறுத்துகிறேன்.

2. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் எப்போதும் போலவே, நமது இதயம் மகிழ்ச்சியுடன் உள்ளது. பெருந்தொற்றின் வீரியம் குறைந்திருந்தாலும், நம்மை விட்டு கொரோனா முழுமையாக சென்று விடவில்லை. இந்த ஆண்டு மீண்டும் எழுச்சி பெற்ற கொரோனா பெருந்தொற்றின் பேரழிவு தாக்கத்தில் இருந்து நாம் வெளியேவரவில்லை.

3. கொரோனா இரண்டாம் அலை, நமது பொது சுகாதார உள்கட்டமைப்பை அழுத்தத்துக்கு ஆளாக்கியது. உண்மையில், முன்னேறிய நாடுகளின் மேம்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் கூட இந்த பெருந்தொற்றின் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை. இதில் நிலவும் இடைவெளியை கண்டறிந்து பாதிப்பை குறைக்க போர்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

4. இதுவரை நடந்த நிகழ்வுகளின் மூலம் நாம் பாடம் கற்றுக் கொண்டிருந்தோம் என்றால், கூடுதல் கவனத்துடன் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இதுதான். எந்த நிலையிலும் நம்மை பாதுகாப்பதில் இருந்து துவளக்கூடாது. அறிவியல் நமக்கு வழங்கிய பங்களிப்பாக தடுப்பூசிகள் உள்ளன. அவை மட்டுமே நம்மை பாதுகாக்கும். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடாத மற்றவர்களும் விரைவாக போட்டுக் கொள்ள வேண்டும்.

5. கடந்த மே மற்றும் ஜூன் மாைதங்களில் உணவு தானியங்களை அரசு விநியோகம் செய்தது. இந்த பயன்கள் வரும் தீபாவளி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி மதிப்பிலான தொகுப்புதவி திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவதற்காக ரூ. 23 ஆயிரத்து 220 கோடி செலவிடப்பட்டுள்ளது.

6. ஜம்மு காஷ்மீரில் புதிய விடியல் பிறந்துள்ளது. அங்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட சம்பந்தப்பட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சட்டத்தின் ஆட்சி அங்கு நடைபெறுவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் குறிப்பாக இளைய சமூகத்தினர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜனநாயக கட்டமைப்புகள் மூலமாக பணியாற்றி தங்களுடைய கனவுகள் நனவாக பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

7. இந்தியா நாடாளுமன்றத்துக்கு என தனி கட்டடம் அமைவது நமக்கு எல்லாம் மிகச்சிறந்த பெருமையாகும். நவீன உலகில் நம் நாடு அடியெடுத்து வைக்கும் போது இந்த கட்டடம் நமது பாரம்பரிய பெருமைகளை உலகுக்கு உணர்த்தும். இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு விழாவில் அந்த கட்டடம் திறக்கப்படுவது அதன் அடையாளத்தை விட மிகவும் பெரிய விஷயமாகும்.

8. இந்த ஆண்டு பல சிறப்பு வாய்ந்த நினைவுகளை உள்ளடக்கிய முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது கங்கன்யான் திட்டம். நமது விமானப்படை பைலட்டுகள் அதற்காக வெளிநாட்டில் பயிற்சி எடுத்து வருகின்றனர். அவர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும்போது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவதாக விளங்கும். 2047இல் வலிமையான, சக்திவாய்ந்த இந்தியாவின் 100ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதை இப்போதே நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

9. அதிகரித்து வரும் கடல் அலைகள், உருகும் பனிமலைகள் போன்றவற்றால் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மனித வாழ்வில் யதார்த்தமாகி விட்டது. பாரிஸ் பருவநிலை மாநாட்டுக்கு உடன்படும் இந்தியா, பருவநிலை மாற்றத்தை தடுக்க உறுதியளித்த பிற நாடுகளை விட அதிகமாகவே ஈடுபாடு காட்டி வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் உலகம் தமது வழியை திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. கொரோனா நெருக்கடி காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் தன்னலமற்ற மனிதாபிமானத்துடன் மற்றவர்களுடைய உயிரைக் காக்க தங்களுடைய உயிரை பணயம் வைத்துள்ளனர். அந்த வகையில் அனைத்து கொரோனா முன்கள வீரர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவால் பலரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று பேசியுள்ளார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

முன்னதாக, டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கெடுத்த வீரர், வீராங்கனைகளை தமது மாளிகைக்கு வரவழைத்த குடியரசு தலைவர், அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த வீரர்கள் அனைவரும் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். பிறகு அவர்கள் பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.